சூரம்பட்டி அணைக்கட்டில் இருந்து செல்லும் நஞ்சை ஊத்துக்குளி கிளை வாய்க்கால் தண்ணீரில் செத்து மிதந்த மீன்கள்

*மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு

ஈரோடு : ஈரோடு, சூரம்பட்டி அணைக்கட்டில் இருந்து பிரிந்து செல்லும் நஞ்சை ஊத்துக்குளி கிளை வாய்க்காலில் மீன்கள் இறந்து மிதந்தது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஈரோடு, சூரம்பட்டி வலசு முத்தம்பாளையம் ஹவுசிங் யூனிட் இடையே, பெரும்பள்ளம் ஓடையின் குறுக்கே உள்ளது சூரம்பட்டி அணைக்கட்டு. இதில், அணையின் வலது கரையான முத்தம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் இருந்து, நஞ்சை ஊத்துக்குளி கிளை வாய்க்கால் அமைந்துள்ளது. இதில், அணையில் தண்ணீர் நிரம்பும்போதும், ஆடி மற்றும் வைகாசி பட்டங்களில் நஞ்சை ஊத்துக்குளி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

கோடை வறட்சியின் காரணமாக சூரம்பட்டி தடுப்பு அணையில் தண்ணீர் குறைந்து சொற்ப அளவிலான தண்ணீரே தேங்கி இருந்தது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து கன மழை காரணமாக பெரும்பள்ளம் ஓடையில் தண்ணீர் வரத்து அதிகரித்து, அணை நிரம்பி வழிந்து செல்கிறது. இதனால், நஞ்சை ஊத்துக்குளி வாய்க்காலிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று காலையில், அணையில் இருந்து வாய்க்கால் பிரியும் இடத்தில் மீன்கள் இறந்து மிதந்தன. இதை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். நேற்று முன்தினம், மேட்டூர், அணையில் இருந்து காவிரி ஆற்றில் உள்ள செக்கானூர் அணை பகுதியில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து மிதந்தன. இதேபோல, கிருஷ்ணகிரி அருகே கே.ஆர்.பி அணையிலும் கூட்டம் கூட்டமாக மீன்கள் இறந்து மிதந்தன.

அதற்கான காரணத்தை ஆய்வு செய்த அதிகாரிகள், தண்ணீரில் நைட்ரேட் அளவு அதிகரித்து, ஆக்சிஜன் குறைந்ததால் மீன்கள் இறந்திருக்கலாம் என கூறினர். நேற்று ஈரோட்டில் உள்ள வாய்க்காலிலும் மீன்கள் இறந்து மிதப்பது அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இது குறித்து தகவலின் பேரில் மாநகராட்சி மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் நஞ்சை ஊத்துக்குளி வாய்க்காலில் மீன்கள் இறந்து மிதப்பது குறித்து ஆய்வு செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

The post சூரம்பட்டி அணைக்கட்டில் இருந்து செல்லும் நஞ்சை ஊத்துக்குளி கிளை வாய்க்கால் தண்ணீரில் செத்து மிதந்த மீன்கள் appeared first on Dinakaran.

Related Stories: