நீட் தேர்வு விலக்கு மனுவை நேரில் அளிக்க முயற்சி; தமிழக எம்பி.க்கள் குழுவை சந்திக்க 3வது முறையாக அமித்ஷா மறுப்பு: டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு

புதுடெல்லி: தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் விவகாரத்தில் தமிழக ஆளுநர்தான் முழு பொறுப்பு ஆவார் என டெல்லியில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி தமிழக அரசு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது. கடந்த மாதம் தமிழக ஆளுநரை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஜனாதிபதிக்கு விரைவாக அனுப்பும்படி கோரிக்கை வைத்தார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரிலும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க ஒப்புதல் வழங்கக்கோரி  திமுக உள்ளிட்ட தமிழக கூட்டாக வலியுறுத்தின.

இந்நிலையில், டெல்லியில் திமுக. நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் ஜனாதிபதி அலுவலகத்தில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற மனுவை கடந்த மாதம் 28ம் தேதி வழங்கினர். அங்கிருந்து அது உடனடியாக ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இருப்பினும், நீட் தேர்வை ரத்து செய்யும் கோரிக்கை மனுவை ஒன்றிய உள்துறை அமைச்சக அலுவலகத்தில் டி.ஆர்.பாலு தலைமையில் அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் தரப்பில் நேற்று மீண்டும் கொடுக்கப்பட்டது. பின்னர், டி.ஆர்.பாலு அளித்த பேட்டியில், ‘‘நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஜனாதிபதிக்கு அனுப்பாமல் தமிழக ஆளுநர் அவரது இல்லத்தில் வைத்துள்ளார். இது கண்டிக்கத்தக்கது. அரசியல் சாசனத்திற்கு எதிரானது.

கடந்த பத்து நாட்களாக இந்த விவகாரம் தொடர்பாக நேரில் சந்தித்து விளக்கமளிக்க உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் நேரம் கேட்டு வந்தோம். ஆனால், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இதுவரையில் 3வது முறையாக நாங்கள் நிராகரிப்பட்டுள்ளோம். தமிழக சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை சட்டப்படி, ஜனாதிபதிக்கு ஆளுநர் அனுப்பி இருக்க வேண்டும்.

ஆனால், தற்போது வரையில் அனுப்பி வைக்கவில்லை. தமிழகத்தில் நடக்கும் நீட் தேர்வு விவகாரத்துக்கு தமிழக ஆளுநர்தான் முழு பொறுப்பாவார். நீட் தேர்வுக்கு பயந்து தமிழகத்தில் இதுவரையில் 13 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மாநில அரசின் தீர்மானத்துக்கு எதிராக செயல்படும் ஆளுநர் பதவி விலகிவிட்டு போகலாம். இருப்பினும், இந்த மாதம் தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடியை நாங்கள் எதிர்க்கவில்லை; வரவேற்கிறோம். தமிழகத்து்க்காக அவர் 11 மருத்துவ கல்லூரிகளை தருகிறார்,’ என தெரிவித்தார். அதிமுக நவநீத கிருஷ்ணன், காங்கிரஸ் ஜெயக்குமார், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், இடதுசாரிகள் கட்சி சார்பில் சு.வெங்கடேசன், செல்வராஜ், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: