எனது தலைமையில் ராமராஜ்ஜியம் கிருஷ்ணர் கனவில் வந்து உறுதி அகிலேஷ் யாதவ்: எதுவும் செய்யாதவர்களை பகவான் தண்டிப்பார் யோகி ஆதித்யநாத்

லக்னோ: வளர்ச்சி பணிகள் செய்யா தவர்களை கிருஷ்ணர் தண்டிப்பார் என்று முதல்வர் யோகி தெரிவித்தார். உத்தரப்பிரதேசத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இந்நிலையில், பாஜ எம்பி ஒருவர், வரும் சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் மதுரா தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று பகவான் கிருஷ்ணர் விரும்புகிறார் என்று கூறினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பொதுக்கூட்டத்தில் பேசிய அகிலேஷ் யாதவ், ‘கிருஷ்ணர் தினமும் என் கனவில் வந்து என் தலைமையிலான ஆட்சியில் தான் ராமராஜ்ஜியம் அமையப்போகிறது என்று கூறுகிறார்’ என்றார்.

இந்நிலையில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறிய கருத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

அலிகாரில் நேற்று நடந்த அரசு நிகழ்ச்சியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது: ‘சிலர் தங்கள் கனவில் கிருஷ்ணரை பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். உங்களது தோல்வியை நினைத்து அழுங்கள் என்று பகவான் கூறியிருப்பார். நீங்கள் என்ன செய்யவில்லையோ அதனை இப்போது பாஜ அரசு செய்து முடித்துள்ளது. நீங்கள் ஆட்சியில் இருந்தபோது மதுரா மற்றும் பிருந்தாவனம் போன்ற இடங்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று அவர்களிடம் கிருஷ்ணர் சொல்லியிருப்பார். அதற்காக அவர்களை தண்டிப்பார். முந்தைய ஆட்சி காலத்தில் செல்போன், லேப்டாப்பை சார்ஜ் செய்ய முடியாத நிலையில் மின்தட்டுப்பாடு இருந்தது. தற்போது வளர்ச்சி பாதையில் உத்தரபிரதேச மாநிலம் பயணித்து வருகிறது’ என்றார்.

Related Stories: