கவர்னரிடம் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படும் நளினி உள்பட 7 பேர் விடுதலையில் உச்சநீதிமன்றம் நல்ல முடிவு எடுக்கும்: சேலத்தில் சட்ட அமைச்சர் ரகுபதி பேட்டி

சேலம்: நளினி உள்பட 7 பேர் விடுதலை குறித்து உச்சநீதிமன்றம் நல்லமுடிவு எடுக்கும் என்று சேலத்தில் தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி கூறினார். தமிழக சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் ரகுபதி, சேலம் மத்திய சிறையில் நேற்று  ஆய்வு மேற்கொண்டார். அவருடன் கலெக்டர் கார்மேகம், சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம், ராஜேந்திரன் எம்எல்ஏ, பார்த்திபன் எம்பி, முன்னாள் அமைச்சர் செல்வகணபதி மற்றும் அரசு அதிகாரிகள் சென்றனர்.

பின்னர் அமைச்சர் ரகுபதி அளித்த பேட்டி: மதுரை மத்திய சிறையில் ₹2.50 கோடி முறைகேடு நடந்திருக்க வாய்ப்பு இல்லை. மோசடிகளுக்கு துணை போகமாட்டோம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஊழல் செய்தவர்களுக்கு உயர் பதவிகள் வழங்கப்படமாட்டாது. சிறையில் லஞ்சம் வாங்குவது தொடர்பான புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் கைதான நளினி உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் உச்சநீதிமன்றத்தில் நளினி தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. ஜனாதிபதிக்கு அனுப்பவேண்டியது இல்லை. கவர்னரே முடிவு எடுக்கலாம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அடுத்த வாய்தா வரும்போது உச்சநீதிமன்றம் நல்ல முடிவு எடுக்கும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறோம். கவர்னரை ஏற்கனவே சந்தித்துவிட்டோம். தொடர்ந்து 7 பேர் விடுதலை குறித்து கவர்னரிடம் அழுத்தம் கொடுப்போம். இவ்வாறு அமைச்சர் ரகுபதி கூறினார்.

அமைச்சர் ரகுபதி, சிறையில் ஆய்வு செய்துவிட்டு வெளியே வந்தபோது சிறை வார்டன்கள், அளித்த மனுவில், காவல் துறையில் 25 ஆண்டு பணியாற்றினால் சிறப்பு எஸ்ஐயாக பதவி உயர்வு வழங்கப்படுகிறது. ஆனால் சிறை வார்டன்கள் 25 ஆண்டுகளானாலும் ஏட்டுகளாக நீடித்து வருகிறோம். உதவி சிறை அதிகாரி பதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.

Related Stories: