1967ம் ஆண்டில் இருந்து செயல்படுகிறது; 58வது ஆண்டில் தடம்பதிக்கும் போடி அரசு மருத்துவமனை: தினமும் 5000 வெளிநோயாளிகளுக்கு சேவையளிக்கிறது

போடி:  தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் போடிநாயக்கனூர் உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஜமீன் நிர்வாகத்தில் இந்தப்பகுதியை ஆட்சி செய்தவர் போடையநாயக்கர். இந்தப் பகுதியானது அவரது பெயரிலேயே போடையநாயக்கனூர் என்றே அழைக்கப்பட்டு வந்தது. நாளடைவில் சுதந்திரம் அடைந்த பிறகு படிப்படியாக போடைய நாயக்கனூர் என்ற பெயர் போடி நாயக்கனூர் என்று மாறியது. தொடர்ந்து பல்வேறு கால கட்டங்களில் மருவி போடி, போடி என சுருக்கமாக அழைக்கப்பட்டு வருகிறது.

100 ஆண்டுகளை கடந்து விட்ட போடி நகராட்சியில் 33 வார்டுகளில் சுமார் 1.10 லட்சம் மக்களும், போடியை சுற்றியுள்ள ஊராட்சி ஒன்றியத்தில் மலை கிராமங்கள் உட்பட 15 கிராம ஊராட்சிகளையும், மீனாட்சிபுரம், மேல சொக்கநாதபுரம், பூதிப்புரம் என மூன்று பேரூராட்சிகளையும் சேர்த்து சுமார் 70 ஆயிரம் பொது மக்கள் என சுமார் 2 லட்சம் பேர் வசிக்கின்றனர். இந்தப் பகுதி மக்களின் மருத்துவ சேவைக்காக ஜமீனுக்கு பாத்தியப்பட்ட இடத்தில் ஐந்து ஏக்கர் பரப்பரளவில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மருத்துவமனை கட்டும் பணி துவங்கியது.

பின்னர் அண்ணா தலைமையில் திமுக ஆட்சி அமைந்ததும் ஏப்.28, 1967 அன்று போடி அரசு மருத்துவமனை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்துவைக்கப்பட்டது. அப்போதைய பொது சுகாதாரத் துறை அமைச்சர் எஸ்.ஜே.சாதிக் பாட்சா மருத்துவமனையை திறந்துவைத்தார். துவக்கத்தில் சுமார் 6க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், ஊழியர்கள், செவிலியர்களை கொண்டு இயங்கி வந்தது.

பின்னர் படிப்படியாக அரசு மருத்துவமனையில் பல்வேறு பிரிவுகள் துவக்கப்பட்டன. கடந்த 2009ம் ஆண்டு திமுக ஆட்சியில் சுமார் ரூ.ஒரு கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மருத்துவமனை புதுப்பிக்கப்பட்டது. தற்போது இந்த மருத்துவமனையில் குழந்தைகள் நல மருத்துவர், மயக்கவியல் மருத்துவர், பொதுநலம், நரம்பியல் மருத்துவர், மகப்பேறு மருத்துவர், தோல் மருத்துவர், மயக்கவியல் மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர், மகப்பேறு மருத்துவர், காது மூக்கு தொண்டை மருத்துவர், பொது மருத்துவம், தலைமை மருத்துவர் உட்பட 15 மருத்துவர்கள் பணிபுரிகின்றனர்.

இங்கு ஆரம்பத்தில் தினமும் சுமார் 1000 வெளிநோயாளிகள் வந்து சென்றனர். 50க்கும் மேலான ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் தற்போது நாள்தோறும் சுமார் 5000 வெளிநோயாளிகள் வந்து செல்கின்றனர். தற்போது இந்த மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற உள் படுக்கைகளும், கர்ப்பிணிகளுக்கு படுக்கைகளும் உள்ளன. துப்புரவு பணியாளர்கள் நான்கு பேர் மட்டுமே உள்ளனர்.

பல்வேறு பிரிவுகளில் பணியாற்ற ஊழியர்கள், நோயாளிகளுக்கு காயங்களுக்கு மருந்து கட்டவும் ஊசிபோடவும் செவிலியர்கள் பற்றாக் குறை உள்ளது. எலும்பு சிகிச்சை, கண் மருத்துவர்கள் இல்லாததால் இது தொடர்பான சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் சிரமமடைகின்றனர். அத்துடன் காது மூக்கு தொண்டை, ஸ்கேன் டாக்டர்களும் இல்லை. கர்ப்பிணிகளுக்கும் விபத்துகளில் சிக்கி வருபவர்களுக்கும் ஸ்கேன் செய்து தொடர் சிகிச்சை அளிப்பதற்கு வசதி இல்லாததால் அவர்களை தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பும் நிலை உள்ளது.

மேலும் தமிழக கேரள எல்லை பகுதியாக இருப்பதாலும், கொச்சின் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையாகவும் இருப்பதால் விபத்துகளில் சிக்கி படுகாயம் அடைபவர்களுக்கு தீவிர திசை அளிப்பதற்கு அவசர பிரிவுகளில் முதலுதவி சிகிச்சை அளிப்பதற்கும் மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளது. ஒரே நேரத்தில் பல சடலங்கள் உடற்கூராய்வுக்கு வரும் போது அதனை பாதுகாத்து வைப்பதற்கு குளிர்சாதன வசதிகள் இல்லாததால் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பும் நிலை நீடித்து வருகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “இன்று 58வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில், மருத்துவர்கள், ஊழியர் பற்றாக்குறை நிரப்பப்பட்டால் அதிகளவிலான புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும்.

தமிழக கேரள எல்லை பகுதியிலும், மலை கிராமங்களிலும் வசிக்கும் மக்களுக்கும் தரமான மருத்துவ சேவையை அளிக்க முடியும். கூடுதல் பிரிவுகள் துவங்கப்பட்டால் அதிகளவிலான கிராம மக்களுக்கு அருகிலேயே சேவையளிக்க முடியும்’’ என்றனர்.

The post 1967ம் ஆண்டில் இருந்து செயல்படுகிறது; 58வது ஆண்டில் தடம்பதிக்கும் போடி அரசு மருத்துவமனை: தினமும் 5000 வெளிநோயாளிகளுக்கு சேவையளிக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: