புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பசுமலைப்பட்டியில் காவலர் பயிற்சி மையத்திலிருந்து துப்பாக்கி குண்டு பாய்ந்த சிறுவன் புகழேந்தி உயிரிழந்தான். புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே பசுமலைப்பட்டி கிராமத்தில் போலீசார் துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் உள்ளது. மலைகள், பாறைகள் நிறைந்த பகுதியில் போலீசார் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 30ம் தேதி மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு குண்டு சுமார் 2கி.மீ. தூரம் தொலைவிற்கு பாய்ந்து சென்றது. அந்த குண்டு நார்த்தாமலையில் உள்ள ஒரு குடிசை வீட்டின் வாசலில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த சிறுவன் புகழேந்தியின்(11) தலையின் இடதுபுறத்தில் பாய்ந்து சிறுவன் மயக்கமடைந்து விழுந்தான்.