வாக்காளர் அடையாள அட்டைகளை குப்பையில் வீசியவர்கள் மீது நடவடிக்கை: விருத்தாசலம் தாசில்தார் உறுதி

விருத்தாசலம்: விருத்தாசலம் தாலுகா அலுவலக குப்பைமேட்டில் குவிந்து கிடந்த வாக்காளர் அடையாள அட்டைகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தாலுகா அலுவலக வளாகத்துக்குள் வாக்காளர் அடையாள அட்டைக்கான பிரிவு இயங்கி வருகிறது. இங்கு பொதுமக்கள் புதிய வாக்காளர் அடையாள அட்டை, வாக்காளர் அட்டையில் பெயர் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் இந்த அலுவலகம் எதிரே உள்ள குப்பை மேட்டில் குப்பைகள் பாதி எரிந்த நிலையில் கட்டுக்கட்டாக புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகள் கிடந்தன. மேலும் ஒரே பெயர் விலாசம் கொண்ட அடையாள அட்டைகள், அடையாள அட்டைகள் விண்ணப்பித்ததற்கான வரிசை எண்களுடன் கூடிய ரசீதுகளுடன் ரப்பர் பேண்ட் போட்டு கட்டுக்கட்டாக கிடந்தன. இதனை கண்ட பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துவிட்டு அதிகாரிகளின் அலட்சியத்தை கண்டு மன வேதனை அடைந்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து அவர்கள் கூறும் போது, வாக்காளர் அடையாள அட்டை வேண்டி விண்ணப்பம் செய்யும் பொது மக்கள், அந்த அடையாள அட்டைகளை பெறுவதற்கு பல்வேறு சிரமங்களை அடைந்து வருகின்றனர். இதற்காக கால விரயம், பணவிரயம் செய்து கிடைக்காமலே அலைக்கழிக்கப்பட்டு வரும் நிலையில், இதுபோன்று குப்பைமேட்டில் கிடக்கும் மர்மம் என்ன என்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும். மேலும் இந்த அடையாள அட்டைகளைப் போல் இன்னும் எவ்வளவு அடையாள அட்டைகள் தயார் செய்து, முறைகேடு செய்துள்ளார்கள் என்பது பற்றியும், அந்த அடையாள அட்டைகளை பறிமுதல் செய்து ஆய்வு நடத்த வேண்டும்.

அரசு ஆவணங்கள் குப்பைமேடுகளுக்கு ஏன் வந்தது என்பது குறித்தும், முறையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து விருத்தாசலம் தாசில்தார் சிவக்குமாரிடம் கேட்டபோது, இச்சம்பவம் குறித்த முழுமையான தகவல்கள் கிடைத்தவுடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். வாக்காளர் அடையாள அட்டைகள் குப்பையில் வீசப்பட்ட சம்பவம் விருத்தாசலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: