பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் பிரிவினருக்கு இடஒதுக்கீடு வருமான உச்சவரம்பு ரூ.8 லட்சம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை: உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பதில்

புதுடெல்லி: ‘பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டுக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள மொத்த ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் என்ற அளவுகோலில் எந்த மாற்றமும் இல்லை’ என உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் ஒன்றிய அரசு 10 சதவீத இடஒதுக்கீடு அளித்துள்ளது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த இடஒதுக்கீட்டின் அடிப்படையில், முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) 27 சதவீத ஒதுக்கீடும், பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு (இடபிள்யுஎஸ்) 10 சதவீத இடஒதுக்கீடும் வழங்கப்படும் என மருத்துவ கவுன்சிலிங் குழு அறிவித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இவற்றை விசாரித்த நீதிமன்றம், ‘பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கான மொத்த ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் என்ற அளவுகோல் எதன் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது?’ என ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பியது. இதற்கு பதிலளித்த அரசின் சொலிசிட்டர் ஜெனரல், பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கான அளவுகோலில் மாற்றங்கள் செய்ய பரிசீலிப்பதாக தெரிவித்தார். இதுதொடர்பாக அரசு 3 பேர் கொண்ட குழுவை அமைத்தது. அந்த குழுவின் பரிந்துரை அடிப்படையில் ஒன்றிய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தற்போது பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், ‘பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கான அளவுகோல் தொடர்பாக குழுவின் பரிந்துரைகளையும், எதிர்கால பரிந்துரைகளையும் ஒன்றிய அரசு முழுமையாக ஏற்க முடிவு செய்துள்ளது. எனவே, பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கான குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் என்பதில் நடப்பு கல்வியாண்டில் எந்த மாற்றமும் செய்ய விரும்பவில்லை. அதே சமயம், வருமானத்தை பொருட்படுத்தாமல், 5 ஏக்கர் அல்லது அதற்கு அதிகமான விவசாய நிலம் வைத்துள்ளவர்களை இந்த வரம்பில் இருந்து நீக்க எதிர்காலத்தில் பரிசிலீக்க குழு பரிந்துரைத்துள்ளது.

இதற்கு காரணம், தற்சமயத்தில் இந்த விஷயத்தில் மாற்றத்தை கொண்டு வரும் பட்சத்தில், அதை எதிர்த்து பல்வேறு வழக்குகள் தொடரப்படும். எனவே, நீட் முதுகலை கவுன்சிலிங் நடத்துவதில் மேலும் சிக்கல் ஏற்படும் என்பதால் இந்த முடிவை அரசு எடுத்துள்ளது’ என கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் 6ம் தேதி விசாரணைக்கு வருகிறது. நீட் முதுகலை மருத்துவ கவுன்சிலிங் நடைபெறாததால் அதை எதிர்த்து நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: