கூகுள்பே, போன் பே, ரிலையன்சுக்கு போட்டியாக யுபிஐ, இ-காமர்ஸ் துறைகளில் நுழைய அதானி குழுமம் முயற்சி: மொத்த ஆன்லைன் சந்தையையும் ஆக்கிரமிக்க மெகா பிளான் தயார்

புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையில் ஒன்றியத்தில் பாஜ ஆட்சி அமைந்த பிறகு, குஜராத் தொழிலதிபர் கவுதம் அதானி தொழில்துறையில் வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளார். இவரது நிறுவனங்கள் துறைமுகம், விமான நிலையம், மின் துறை என பல துறைகளிலும் பரந்து விரிந்து, ஆசியாவின் 2வது பணக்காரராக அதானி உயர்ந்துள்ளார். இந்நிலையில் அடுத்தகட்டமாக சாமானியர்களின் சந்தையையும் ஆக்கிரமிக்க அதானி குழுமம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் யுபிஐ டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை, இ-காமர்ஸ் மூலம் ஆன்லைன் வர்த்தகம் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து வருகிறது. கோடான கோடி வாடிக்கையாளர்கள் தினசரி இந்த சேவைகளை பயன்படுத்தி வருவதால் அடுத்ததாக அதானி இத்துறைகளை குறிவைத்துள்ளார். இதனால் கூகுள் பே, போன் பே, ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ மணிக்கு போட்டியாக யுபிஐ ஒன்றை புதிதாக தொடங்க லைசென்ஸ் கேட்டு விண்ணப்பிக்கும் நடவடிக்கைகளை அதானி குழுமம் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதோடு, வங்கிகளுடன் இணைந்து கிரெடிட் கார்டு தொழிலும் அதானி குழுமம் கால் பதிக்க உள்ளது. இந்த சேவைகள் அனைத்தையும், 2022ல் தொடங்கப்பட்ட அதானி ஒன் ஆப் மூலமாக ஒரே இடத்தில் வழங்கவும் தொழில்நுட்ப ரீதியாக தயாராகி வருகிறது. ஏற்கனவே அதானி குழுமம் விமான நிலையம், சுற்றுலா, ஓட்டல் புக்கிங், எரிவாயு, மின்சாரம் என பல துறைகளில் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. அவர்கள் அனைவரையும் குறிவைத்து, தனது சொந்த யுபிஐ ஆப் மூலம் பணம் செலுத்தினால் அதற்கு கிப்ட் கூப்பன், பாயிண்ட்ஸ் கொடுத்து அதை வைத்து ஆன்லைன் ஷாப்பிங் செய்யலாம் என்கிற வசதிகளை வழங்க உள்ளது. இதன் மூலம் வெகுஜன மக்களின் சந்தையிலும் அதானி குழுமம் ஆழமாக நுழைய முடியும். இது அதானி குழுமத்தின் ஆதிக்கத்தை மிகப்பெரிய அளவில் பரவச் செய்யும். இதற்கான பணிகளை அதானி குழுமம் வேகமாக செய்து வருகிறது.

 

The post கூகுள்பே, போன் பே, ரிலையன்சுக்கு போட்டியாக யுபிஐ, இ-காமர்ஸ் துறைகளில் நுழைய அதானி குழுமம் முயற்சி: மொத்த ஆன்லைன் சந்தையையும் ஆக்கிரமிக்க மெகா பிளான் தயார் appeared first on Dinakaran.

Related Stories: