திருப்பதி ஏழுமலையான் கோயில் சொர்க்க வாசல் தரிசனத்துக்கு சிபாரிசு கடிதம் தர வேண்டாம்: விஐபி.க்களுக்கு தேவஸ்தானம் அறிவுரை

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 12ம் தேதி நள்ளிரவு முதல் 22ம் தேதி நள்ளிரவு வரை 10 நாட்கள்  வைகுண்ட ஏகாதசிக்கான சொர்க்க வாசல் திறந்து பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த தரிசனத்திற்காக ஏற்கனவே ஆன்லைனில் ரூ.300 சிறப்பு நுழைவு தரிசனம், இலவச தரிசனத்திற்கான டிக்கெட் பக்தர்களுக்கு  வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் எவ்வித பாதிப்புமின்றி தரிசிக்க, முக்கிய பிரமுகர்கள் தங்களின் சிபாரிசு மற்றும் பரிந்துரை கடிதங்களை அனுப்ப வேண்டாம். மேலும், அறங்காவலர் குழு தலைவர் அலுவலகத்தில் 10 நாட்களுக்கு பரிந்துரை கடிதங்கள் வழங்கப்படாது.

வைகுண்ட ஏகாதசி நாளில் திருமலையில் கோவிட் காரணமாக  திருமலையில் அறைகள் பழுது பார்க்கப்படுகிறது. இதனால், மக்கள் பிரதிநிதிகள் திருமலையில் உள்ள நந்தகம் மற்றும் வகுலா பக்தர்கள் ஓய்வறைகளில்  தங்க வைக்கப்படுவார்கள். அறைகள் தட்டுப்பாடு ஏற்பட்டால் திருப்பதியில் உள்ள மாதவம் பக்தர்கள் ஓய்வறையில் தங்க ஏற்பாடு செய்யப்படும். ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கிய பக்தர்கள் மாதவம், சீனிவாசம், ஸ்ரீபத்மாவதி நிலையம், எஸ்வி விருந்தினர் மாளிகை ஆகிய இடங்களில் தங்க வைக்கப்படுவார்கள். 10 நாள் வைகுண்ட தரிசனத்தின்போது விஐபிக்களின் வருகை நேரத்தை குறைக்கவும், சாதாரண பக்தர்களுக்கு அதிக நேரம் ஒதுக்கவும் அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: