ஜிஎஸ்டி அவசர கூட்டத்தை கூட்ட மாநிலங்களுக்கு உரிமை அளிக்க வேண்டும்: தமிழக நிதியமைச்சர் கோரிக்கை

புதுடெல்லி: ‘ஜிஎஸ்டி கவுன்சிலின் அவசர கூட்டத்தை கூட்டுவதற்கான உரிமையை மாநிலங்களுக்கும் அளிக்க வேண்டும்,’ என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் ராஜன் வலியுறுத்தி உள்ளார். டெல்லியில் நேற்று நடைபெற்ற 46வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்குப் பிறகு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அளித்த பேட்டி வருமாறு: ஜவுளித்துறைக்கு 12 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பதற்கு, ஜிஎஸ்டி கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதே கோரிக்கையை மற்ற சில மாநிலங்களும் முன் வைத்தன. ஜவுளித்துறைக்கான ஜிஎஸ்டி வரியை 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்துவது குறித்து 5 முறை ஆலோசனை நடத்தப்பட்டதாக இந்த கூட்டத்தில் ஒன்றிய அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த முடிவு 19வது கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்கள்.

ஆனால், அதன் பின்விளைவுகளையும், பாதிப்புகளையும் கருத்தில் கொள்ளவில்லை. ஜவுளிக்கான வரி 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக மாற்றுவதற்கு பதிலாக, இதற்கான ஜிஎஸ்டி வரி பணத்தை திருப்பி (ரீபண்ட்) தரக்கூடாது என சில மாநிலங்கள் தெரிவித்தன. இதற்கு தமிழகத்தின் தரப்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் அது கைவிடப்பட்டது. மக்களுடன் தொடர்ப்பில் இருக்கும் எங்களின் கருத்து, கூட்டத்தில் தீவிரமாக வலிறுத்தப்பட்டு உள்ளது. அதனால், தகவலின் அடிப்படையில் எந்த முடிவையும் எடுக்கக் கூடாது. கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் அனைத்தும் மாநிலங்களின் கடைகோடி வரைசெல்ல வேண்டுமே தவிர, வெறும் காணொலி கூட்டமாக மட்டுமே இருந்து விடக்கூடாது. மேலும், இதுபோன்ற ஜிஎஸ்டி அவசர கூட்டத்தை கூட்டுவதற்கு ஜிஎஸ்டி உறுப்பினர்கள் அனைவருக்கும் உரிமை வழங்க வேண்டும்.

மக்களுக்கு எவை எல்லாம் பாதிப்புகளை ஏற்படுத்துமோ, அவற்றை எல்லாம் செயல்படுத்த வேண்டும் என்று ஒன்றிய அரசு நினைக்கிறது. கூட்டுரிமை என்று கூறிவிட்டு, எல்லா அதிகாரங்களையும் ஒன்றிய அரசு தனது கைகளில் மட்டுமே வைத்துள்ளது. அதனால், இருக்கும் நடைமுறைகளை முறையாக பயன்படுத்த வேண்டும் என ஒன்றிய நிதியமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, ஜவுளித்துறைக்கான வரியை 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தும் முடிவு நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்னையில் மாநிலங்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு, ஜனநாயகம் நிலை நாட்டப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: