திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜன.13ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜன.13ம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட உள்ளதாக கூடுதல் செயல் அதிகாரி தர்மா தெரிவித்துள்ளார். திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் அனைத்து துறை அதிகாரிகளுடன் தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தர்மா நேற்று ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் கூறியதாவது: வருகிற 1ம் தேதி ஆங்கில புத்தாண்டு, 13ம் தேதி வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது. இதில்,  13ம் தேதி முதல் 22ம் தேதி வரை 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் தரிசனத்திற்கு பக்தர்கள்  அனுமதிக்கப்பட உள்ளனர்.

13ம் தேதி அதிகாலை 12 மணி முதல் 2 மணி வரை திருப்பாவை, தோமாலை, அர்ச்சனை, நெய்வேத்தியம் சமர்பித்து பூஜைகள் நடைபெறும்.

2 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு முக்கிய பிரமுகர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். ₹300 சிறப்பு தரிசன டிக்கெட், இலவச தரிசனம், கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரமோற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவை டிக்கெட்டுகள் ஆன்லைனில் பெற்றவர்களுக்கு காலை 9 மணி முதல் ஒதுக்கப்பட்ட நேரத்தில் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

நாள்தோறும் 45 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனாவை தொடர்ந்து ஒமிக்ரான் தொற்று  பரவக்கூடிய நிலையில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தாலும் காய்ச்சல், உடல்வலி,  சளி உள்ளிட்ட அறிகுறி உள்ளவர்கள் தரிசனத்திற்கு வர வேண்டாம். தரிசனத்திற்கு வரக்கூடிய பக்தர்கள் கட்டாயம் 2 டோஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் அல்லது 48 மணிநேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட ஆர்டிபிஆர் நெகடிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

திருப்பதியில் 5 இடங்களில் நாள்தோறும் 5 ஆயிரம் டிக்கெட்டுகள் என 11 நாட்களுக்கு 55 ஆயிரம் டிக்கெட்டுகளை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டுகள் திருப்பதி முகவரி கொண்ட ஆதார் அட்டை உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். மற்ற யாரும் இந்த டிக்கெட்டுகளை பெற வரவேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

*10 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்

ஏழுமலையானின் தீவிர பக்தரான அன்னமய்யா, கடப்பாவில் இருந்து பாத யாத்திரையாக வந்து ஏழுமலையானை தரிசித்த பாதையான ‘அன்னமய்யா மார்க்கத்தை’ 3வது மலைப்பாதையாக அமைக்க தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி தலைமையிலான குழு முடிவு செய்தது. இதனை வரவேற்கும் விதமாக கடப்பா மாவட்டம் ராஜம்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கடப்பாவில் இருந்து அன்னமய்யா மார்க்கம் வழியாக திருமலைக்கு நேற்று முன்தினம் பாத யாத்திரையாக வந்தனர். அவர்கள் யாரிடமும் தரிசன டிக்கெட்டுகள் இல்லை. இதையறிந்த அதிகாரிகள், அனைவரையும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதித்தனர்.

இதுகுறித்து கூடுதல் செயல் அதிகாரி தர்மா கூறுகையில், ‘‘கடந்த 29 ஆண்டுகளாக அன்னமய்யா மார்க்கத்தில் கடப்பா மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் பாரம்பரியமாக வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதேபோல், தற்போதும் அவர்கள் வந்ததையடுத்து, டிக்கெட்டுகள் இல்லையென்றாலும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், அவர்கள் 10 ஆயிரம் பக்தர்கள் இல்லை. வெறும் 3 ஆயிரம் பக்தர்கள் வந்தனர்’’ என்றார்.

*சென்னையில் தினமும் 30 ஆயிரம் லட்டுகள் விற்பனை

வருகிற 1ம் தேதி முதல் 22ம் தேதி வரை சென்னையில் உள்ள தகவல் மையத்தில் நாள்தோறும்  30 ஆயிரம் லட்டுகள் ₹50, 500 லட்டுகள் கல்யாண உற்சவ சேவை ₹200க்கு விற்க  கொண்டு வரப்பட்டுள்ளது. வேலூரில் 5,000 லட்டுகள்,  பெங்களூரில் 10 ஆயிரம்  லட்டுகள் என ஐதராபாத், விசாகப்பட்டினம் ஆகிய இடங்களிலும் லட்டுகள் விற்க  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கனமழையால் சேதமடைந்த வாரிமெட்டு மலைப்பாதை  புனரமைக்கும் பணிகள் 6 மாதங்களுக்கு மேல் ஆகும் என்பதால் தற்போதைக்கு மலைப்பாதை வழியே பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.

Related Stories: