மக்களுக்கு கூடுதல் சுமை ஏற்படுவதை தடுக்க மாதம் தோறும் மின் கட்டணம் செலுத்தும் நடைமுறை: அரசுக்கு விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை: தமிழக மக்கள் மின் கட்டணத்தை ஏற்கனவே அதிக அளவில் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது ஜிஎஸ்டி வரியை மறைமுகமாக மின் கட்டணத்தில் சேர்த்திருப்பது மக்களுக்கு அதிக சுமையை ஏற்படுத்தியுள்ளது. இது மின்கட்டண உயர்வுக்கு மிகப் பெரிய அடித்தளமாக அமைந்துள்ளது. ஏற்கனவே பெட்ரோலியப் பொருட்களும், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது. தற்போது மின் கட்டணத்துக்கு ஜிஎஸ்டி வசூலிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

மின் கட்டணத்தில் ஜிஎஸ்டி வரியை சேர்த்திருப்பது பற்றி மக்களுக்கு அரசு தெளிவுப்படுத்த வேண்டும். மேலும் மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் செலுத்துவதால் மின் கட்டணம் அதிகரிப்பதோடு, அதனுடன் ஜிஎஸ்டி வரியும் சேர்த்துள்ளதால், மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தமிழகத்தில் மின் கட்டணத்துக்கு ஜிஎஸ்டி வரி வசூலிப்பதை உடனடியாக ரத்து செய்வதோடு, இந்த விவகாரத்தில் அரசு வெளிப்படை தன்மையுடன் செயல்பட வேண்டும்.

Related Stories: