ஜன. 3 முதல் 15 - 18 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி; 2024 பார்லி. தேர்தலில் புதிய வாக்காளர்களை கவரும் திட்டமா?.. ஒன்றிய சுகாதார செயலாளர், ஐசிஎம்ஆர் தலைவர் கருத்துகளை ஏற்காதது ஏன்?

புதுடெல்லி: ஜன. 3 முதல் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கும் என்று பிரதமர் மோடி அறிவித்த நிலையில், இத்திட்டம் வரும் 2024ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் புதிய வாக்காளர்களை கவரும் திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றும், சிறார்களுக்கான தடுப்பூசி திட்டத்தில் ஒன்றிய சுகாதார செயலாளர், ஐசிஎம்ஆர் தலைவர் கருத்துகள் புறக்கணிக்கப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. நாடு முழுவதும் கடந்த ஓராண்டுக்கு மேலாக 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் போடப்பட்டு வருகிறது. இதுவரை 142 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்ட நிலையில், ஒமிக்ரான் வைரஸ் பரவலால் பூஸ்டர் தடுப்பூசி போடுதல் திட்டம் குறித்து பரவலாக பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் வெளியிட்ட அறிவிப்பில், ‘ஜனவரி 3ம் தேதி முதல், 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும். முன்களப் பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னெச்சரிக்கை டோஸ் (பூஸ்டர் டோஸ்) தடுப்பூசி போடும் பணி ஜனவரி 10ம் தேதி முதல் தொடங்கும்; இணை நோயுள்ளவர்கள் மருத்துவர்களின் பரிந்துரையை பெற்று முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்’ என்று தெரிவித்தார். பிரதமர் அறிவித்த தடுப்பூசி திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக நிபுணர்களும், அரசியல் விமர்சகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக ெடல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் மூத்த தொற்று நோயியல் நிபுணர் டாக்டர் சஞ்சய் கே.ராய் கூறுகையில், ‘சிறார்களுக்கு தடுப்பூசி போடுதல் என்பது அறிவியல் ஆதாரமின்றி எடுக்கப்பட்ட முடிவு; இந்த முடிவை அறிவித்ததற்கு முன், சிறார்களுக்கான தடுப்பூசியை ஏற்கனவே போடத் தொடங்கிய நாட்டின் தரவுகளை ஆய்வு செய்திருக்க வேண்டும். பூஸ்டர் டோஸ் போட்டவர்களுக்கும் தொற்று பாதிப்பு ஏற்படுகிறது. கிட்டத்தட்ட 80 முதல் 90 சதவீத உயிரிழப்பை தடுப்பூசி தவிர்க்கிறது என்பது உண்மை. அதனால் பெரியவர்களுக்கு தடுப்பூசி போடுவதில் அர்த்தம் உள்ளது.

குழந்தைகளின் உடலில் கொரோனா தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது’ என்று அவர் கூறினார். சிறார்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. காரணம், 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போட வேண்டிய அவசியமில்லை என்றும், ஆனால் அவர்களில் பலர் 2024ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் முதல் முறையாக வாக்காளிக்க தகுதியானவர்கள் என்பதால் அவர்களின் மீது ஒன்றிய அரசு அக்கறை கொண்டுள்ளதாக பெயர் வெளியிட விரும்பாத பொது சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து மேலும் அவர்கள் கூறுகையில், ‘ஒன்றிய சுகாதார அமைச்சகமும், பிரதமர் அலுவலகமும் கொரோனா தடுப்பு மற்றும் தடுப்பூசி போடும் திட்டத்தில் கூட்டாக செயல்படுகிறதா? என்ற சந்தேகம் உள்ளது. ஏனெனில் பிரதமர் மோடி தொலைக்காட்சியில் தோன்றி ஆற்றிய உரைக்கு 30 மணி நேரத்திற்கும் முன்னதாக, சிறார்களுக்கான தடுப்பூசி திட்டத்திற்கு தேசிய குழுவில் இடம் பெற்ற உயர் அதிகாரிகள் மறுத்துள்ளனர். அதேநேரம் மருத்துவப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், மூத்த குடிமக்களுக்கு முன்னெச்சரிக்கை டோஸ்கள் போடுவதற்கு ஆதரவு அளித்தனர்.

வெள்ளிக்கிழமை மாலை நடந்த கூட்டத்திற்கு பின்னர் ஒன்றிய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் மற்றும் ஐசிஎம்ஆர் இயக்குநர் பல்ராம் பார்கவா ஆகியோர் கூறுகையில், ‘முன்னெச்சரிக்கை டோஸ் மற்றும் சிறார்களுக்கான தடுப்பூசி குறித்து எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை’ என்றனர். ஆனால், அடுத்த நாள் பிரதமர் மோடி தடுப்பூசி திட்டம் குறித்து பகிரங்கமாக அறிவித்தார். கிட்டத்தட்ட ஓராண்டு முன்பு தடுப்பூசி போட்டுக் கொண்ட மருத்துவர்களின் அழுத்தம் காரணமாக பிரதமர் அலுவலகம் இந்த முடிவு எடுத்ததாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

ஓராண்டுக்கு முன்பு தடுப்பூசி போட்டுக் கொண்டோரின் ரத்தத்தில் ஆன்டிபாடியின் அளவு குறைந்துவிடும் என்றும், ஒமிக்ரான் பரவி வரும் நிலையில் உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் நடைபெறவுள்ளதால் தடுப்பூசி குறித்து முக்கிய முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு பிரதமர் அலுவலகம் சென்றுள்ளது. அதனால், சிறார்களுக்கான தடுப்பூசி திட்டத்தை அறிவித்துள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள் போன்ற நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நோயாளிகளுக்கு மட்டுமே முன்னெச்சரிக்கை டோஸ்களை போட நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு அனுமதித்ததாக ஆதாரங்கள் கூறுகின்றன.

ஆனால், இதனை பிரதமர் மோடி வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அதனால், நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவும் (NTGI)  மற்றும் ெகாரோனா தடுப்பூசி நிர்வாகத்திற்கான தேசிய நிபுணர் குழுவும்  (NEGVAC) பிரதமரின் தடுப்பூசி திட்ட அறிவிப்பை அங்கீகரித்துள்ளனவா? என்பது  குறித்தும் தெளிவும் இல்லை’ என்று அவர்கள் கூறினர்.

சிறார்களுக்கு கோவாக்சின் ‘பெட்டர்’

பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான ‘கோவாக்சின்’ தடுப்பூசி 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு போட வாய்ப்புள்ளது. இருப்பினும் சைடஸ் கேடிலா (Zydus Cadila)  நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசியான ‘சைகோவ்-டி’ தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்த இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்குனரகம் சென்ற மாதம் அனுமதி அளித்தது. இந்த தடுப்பூசியானது சிறார்களுக்கான தடுப்பூசி பட்டியலில் முதலில் அனுமதி பெற்றதாகும். ஆனால் வரும் ஜனவரி 3ம் தேதி முதல் தொடங்கும் தடுப்பூசி திட்டத்தில் பயன்படுத்த வாய்ப்பில்லை என்று தகவல்கள் கூறுகின்றன.

இதுகுறித்து நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் தலைவர் என்.கே.அரோரா கூறுகையில், ‘பரிசோதனை முடிவுகளின்படி பார்த்தால், கோவாக்சின் தடுப்பூசி சிறார்களுக்கான மிகச் சிறந்த நோயெதிர்ப்பு சக்தியைக் கொண்டுள்ளது. சிறார்களுக்கு நோய்த்தடுப்பு தடுப்பூசி போடுவதால் இரண்டு நன்மைகள் உள்ளன. ஒன்று, அவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லக் கூடியவர்கள். ஒமிக்ரான் பரவல் அச்சம் உள்ளதால் அவர்களுக்கு தடுப்பூசி போட வேண்டியுள்ளது.

இரண்டாவதாக, இளம் பருவத்தினருக்கு முதியவர்கள் மூலம் அவர்களின் வீடுகளுக்குள் தொற்று பரவுகிறது. கொரோனாவால் இறந்தவர்களில் மூன்றில் இரண்டு பங்கு மேற்கண்ட வயதினர் இறந்துள்ளனர். எனவே 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசியை அறிமுகப்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது’ என்றார்.

6 கோடி பேருக்கு 3வது தடுப்பூசி

வரும் ஜனவரி 10ம் தேதி முதல் முன்களப் பணியாளர்கள் மற்றும் சுகாதார  பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னெச்சரிக்கை டோஸ் போடப்படுகிறது. இவர்கள் ஏற்கனவே இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட நிலையில் கிட்டத்தட்ட ஒன்பது மாத இடைவெளிக்குப் பிறகு மூன்றாவது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள உள்ளனர். இத்திட்டத்தில் நாடு முழுவதும் மூன்று கோடி சுகாதார மற்றும் முன்களப் பணியாளர்கள் உள்ளனர். அதேபோல், தற்போதைய நிலவரப்படி, 60 வயதுக்கு மேற்பட்டோர் பட்டியலில் மூன்று கோடி பேர் உள்ளனர். இவர்களுக்கும் மூன்றாவது டோஸ் போடப்படும் என்பதால் கிட்டத்தட்ட 6 கோடி பேர் இத்திட்டத்தில் பயனடைய உள்ளனர்.

ஒமிக்ரான் 578 ஆக அதிகரிப்பு

ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவதால் பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மகாராஷ்டிரா, டெல்லி, உத்தர பிரதேசம், கர்நாடகா, அரியானா, குஜராத், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய நிலையில் நாடு முழுவதும் 578 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் புதியதாக 6,531 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 315 பேர் இறந்துள்ளனர். நாடு முழுவதும் 1,41,74,14,987 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதில் முதல் டோஸ் 83,80,96,855 பேருக்கும், இரண்டு டோசும் 57,93,18,132 பேருக்கும் போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories: