5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேர்தல் ஆணையம் தீவிர ஏற்பாடு: ஜனவரி 5ம் தேதி அறிவிப்பு வெளியாக வாய்ப்பு சுகாதார செயலாளருடன் நாளை ஆலோசனை

புதுடெல்லி:  டெல்டா வகை கொரோனா வைரசை தொடர்ந்து, தென் ஆப்ரிக்காவில் புதிதாக தோன்றிய ஒமிக்ரான் வைரஸ், தற்போது உலகத்தை அச்சுறுத்தி கொண்டிருக்கிறது. இந்தியாவில் இதன் பாதிப்பு வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக, வரும் ஜனவரியில் தொடங்கி, பிப்ரவரி இறுதிக்குள் இந்தியாவில் இதன் அலை உச்சத்தை தொடும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். இதனால், மக்களிடையே பீதி நிலவுகிறது.

இந்நிலையில், உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் அடுத்த ஆண்டு துவக்கத்தில் சட்டப்பேரவை தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்தேர்தலை பிப்ரவரியில் நடத்த தேர்தல் ஆணையம் ஏற்பாடுகள் செய்து வருகிறது. அரசியல் கட்சிகளும் இப்போதே பிரமாண்ட பேரணிகளை நடத்தி பிரசாரத்தை தொடங்கி உள்ளன. இது, ஒமிக்ரான் பரவலுக்கு காரணமாகி விடுமோ என்ற கவலை நிலவி வருகிறது.

தமிழ்நாடு,  மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் கடந்த ஏப்ரலில் தேர்தல் நடந்தபோது டெல்டா வைரசின் தாக்குதல் உச்சக்கட்டத்தை எட்டி இருந்தது. இந்த தேர்தல் பிரசார கூட்டங்கள், பேரணிகளால் தொற்றின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாகி உயிர் பலிகள் கணக்கில்லாமல் போனது. வழக்கு விசாரணை ஒன்றின்போது நேற்று முன்தினம் இதை சுட்டிக்காட்டிய உத்தர பிரதேசத்தில் உள்ள அலகாபாத் உயர் நீதிமன்றம், ‘ஒமிக்ரான் அச்சுறுத்தலை தவிர்க்க, உத்தர பிரதேச தேர்தலை ஒத்திவைப்பது பற்றி பிரதமர் மோடியும், தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும்’ என தெரிவித்தது.

இது பற்றி கருத்து தெரிவித்த  தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா, ‘அடுத்த வாரம் உத்தர பிரதேசத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்த பிறகு, தேர்தல் தொடர்பாக உரிய முடிவு எடுக்கப்படும்,’ என்று தெரிவித்தார். ஆனால், திட்டமிட்டப்படி தேர்தலை நடத்துவதில் தேர்தல் ஆணையம் உறுதியாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. கொரோனா 2வது அலையின் போதே, பாதுகாப்பு வழிகாட்டு முறைகளை பின்பற்றி தேர்தலை நடத்தி முடித்தது, அதற்கு இம்முறையும் நம்பிக்கை அளித்துள்ளது. மேலும், ஒமிக்ரான் அதிகமாக பரவினாலும் பெரியளவில் பாதிப்புகளை ஏற்படுத்தாது என்று நிபுணர்கள் கூறி வருவதை அது கருத்தில் கொண்டுள்ளது.  இதனால்,  தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது.  ஏற்கனவே, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுக்கு தேர்தல் குழு சென்று, தேர்தல் ஏற்பாடுகள் குறித்த முதல் கட்ட ஆய்வை நடத்தி முடித்துள்ளது.

எனவே, அடுத்தக்கட்டமாக  ஒன்றிய சுகாதாரத் துறை  செயலாளர் ராஜேஷ் பூஷனுடன் தேர்தல் ஆணையம் நாளை ஆலோசனை நடத்துகிறது. இதன் அடிப்படையில், தேர்தல் அறிவிப்புக்கான தேதியை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அடுத்த மாதம் முதல் வாரத்தில் முக்கிய முடிவுகளை அது எடுக்கும் என்றும், கோவா உள்ளிட்ட சில மாநிலங்களுக்கான தேர்தல் அறிவிப்பை ஜனவரி 5ம் தேதி வெளியிட வாய்ப்புகள் இருப்பதாகவும்  தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறியுள்ளன.

Related Stories: