மின்சாரம் பாய்ச்சி குதிரைகளை வேகமாக ஓட வைத்தனர் ரேக்ளா போட்டிக்கு ஒத்திகை வாலிபர்கள் மீது நடவடிக்கை

பாலக்காடு : பாலக்காடு- திருச்சூர் சாலையில் காளை மாட்டு வண்டி, குதிரை வண்டி ரேக்ளா போட்டிக்கு ஒத்திகை நடத்திய வாலிபர்கள் மீது நடவடிக்கை எடுக்க அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.பாலக்காடு- திருச்சூர் சாலையில் ஆலத்தூர்- கண்ணனூருக்கும் இடையிலாக கடந்த 19ம் தேதி சில வாலிபர்கள் 4 மாட்டு வண்டிகள் மற்றும் இரண்டு குதிரை சவாரி வண்டிகளுடன் ரேக்ளா போட்டிக்கு தயாராக ஒத்திகை நடத்தினர்.

இதில், குதிரை வேகமாக ஓடுவதற்கு பேட்டரி மூலமாக மின்சாரம் பாய்ச்சி விரட்டி ஓட்டியுள்ளனர். மேலும், மாட்டை வேகமாக ஓட வைக்க மாட்டு வண்டியின் 2 பக்கமும் பைக்கில் வாலிபர்கள் தலைகவசங்கள் அணியாமல், விரட்டி ஓட்டியுள்ளனர். இதனால் ஆலத்தூர்- பாலக்காடு சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது, வாகனங்களில் வந்தவர்கள் சாலையோரம் நின்றபடி குதிரை மற்றும் மாட்டு வண்டி ரேக்ளா போட்டியை செல்போன்களில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து சமூகவலைத்தலங்களில் பரப்பினார்.

இந்த வீடியோவை பார்த்த அமைச்சர் சிஞ்சுராணியும், மாநில மிருகவதைத் தடுப்புப்பிரிவு சட்டத்தின் கீழ் ரேக்ளா பந்தயம் நடத்திய வாலிபர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு குழல்மந்தம் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அத்துமீறி சாலையில் ரேக்ளா போட்டி நடத்திய வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: