கடமலைக்குண்டு அருகே பள்ளியை பெற்றோர்கள் முற்றுகை-மாணவர்களை வேலை செய்ய வைப்பதாக புகார்

வருசநாடு : கடமலைக்குண்டு அருகே மாணவர்களை வேலை செய்ய வைப்பதாக கூறி பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடமலைக்குண்டு அருகே கரட்டுப்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 84 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். தலைமை ஆசிரியர், 2 ஆசிரியர்கள் உள்ளனர். இங்கு கடந்த சில நாட்களாக பள்ளி மாணவ மாணவிகளை வைத்து பல்வேறு பணிகளை செய்ய விடுவதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதை கண்டித்து நேற்று கரட்டுப்பட்டி ஒன்றிய ஆரம்பப் பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டனர்.

இத்தகவல் அறிந்த கரட்டுப்பட்டியை சேர்ந்த திமுக இளைஞரணி நிர்வாகி கரட்டுப்பட்டி  ஈஸ்வரன் கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜனிடம் சுட்டிக் காட்டுவதாக கூறியதை அடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.  

இதுகுறித்து கிராமத்தை சேர்ந்த பொன்னுத்தாய், பால்தாய் ஆகியோர் கூறுகையில், எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்தால் பள்ளி வேலைகளை செய்ய வைத்து கல்வி கற்றுக் கொடுக்காமல் மிகவும் கொடுமைப்படுத்தி வருகிறார்கள். எனவே  இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கல்வி உயர் அதிகாரிகள் இது சம்பந்தமாக ஆய்வு நடத்தி சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Related Stories: