ஒமிக்ரான் தொற்று அதிகரிக்கும் நிலையில் பூஸ்டர் தடுப்பூசியை எப்போது போடுவீர்கள்? ஒன்றிய அரசுக்கு ராகுல் கேள்வி

புதுடெல்லி: கொரோனாவுக்கு எதிரான பூஸ்டர் தடுப்பூசியை ஒன்றிய அரசு எப்போது வழங்கும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பி இருக்கிறார். நாட்டில் கொரோனா மூன்றாவது அலை ஏற்படலாம் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் ஒன்றிய அரசு போதுமான அளவிற்கு தடுப்பூசிகளை  போடவில்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது டிவிட்டர் பதிவில், ‘‘நாட்டில் அதிக எண்ணிக்கையிலானோர் இன்னும் கொரோனா தடுப்பூசி போடாமல் இருக்கின்றனர்.

கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை தடுத்து நிறுத்துவதற்கு நாட்டில் 60 சதவீதம் பேருக்கு இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். ஆனால் தற்போது டிசம்பர் வரை 42 சதவீத மக்களுக்கு மட்டும் தான் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 6.1 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட  வேண்டும். கடந்த 7 நாட்களாக ஒரு நாளைக்கு 58லட்சம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 7 நாட்களில் தடுப்பூசி பற்றாக்குறையானது சராசரியாக ஒரு நாளைக்கு 5.5கோடியாகும். இன்று(டிசம்பர் 22) தடுப்பூசி போடப்பட்டவர்கள் (கடந்த 24மணி நேரம்) 57லட்சம் பேராகும். பற்றாக்குறை 5.53 கோடியாகும். தற்போது ஒமிக்ரான் வைரஸ் தொற்று அச்சமும் ஏற்பட்டுள்ளது. ஒன்றிய அரசு பூஸ்டர் தடுப்பூசியை எப்போது வழங்கும்?” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: