மாமனாரை பழிவாங்க 108 ஆம்புலன்சை அலைக்கழித்த வாலிபர்: பழவிளையில் நேற்று இரவு பரபரப்பு

ஈத்தாமொழி: ராஜாக்கமங்கலம் அருகே உள்ள பழவிளையில் இருந்து நேற்று இரவு 9 மணியளவில் 108 ஆம்புலன்ஸ்க்கு போன் கால் வந்தது. போனில் பேசிய நபர், தான் பழவிளை பகுதியில் இருப்பதாகவும், தனக்கு விபத்து ஏற்பட்டதால் படுகாயமடைந்திருப்பதாகவும், மருத்துவமனைக்கு செல்ல உடனடியாக ஆம்புலன்ஸ் வேண்டும் என கூறியுள்ளார். இதையடுத்து கோட்டாரில் இருந்து ஒரு ஆம்புலன்ஸ் வந்தது. சற்று நேரத்தில் ஆசாரிபள்ளத்தில் இருந்து மற்றொரு ஆம்புலன்ஸ்சும் வந்தது. ஆனால் அந்த பகுதியில் காயமடைந்தவர்கள் யாரும் இல்லை. அதோடு விபத்து நடந்ததற்கான தடயங்களும் இல்லை.

அடுத்தடுத்து 2 ஆம்புலன்ஸ் வந்ததால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். இது குறித்து ராஜாக்கமங்கலம் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், ராஜாக்கமங்கலத்தை சேர்ந்த ஹரிகரன் (29) என்பவர் குடிபோதையில் போன் செய்தது தெரியவந்தது. மேலும், குடிக்கு அடிமையான இவர் தினமும் போதையில் வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் அவரது மனைவி பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். அவருக்கு அவரது தந்தை ஆதரவாக இருப்பதால் மனைவியின் தந்தையை சிக்கலில் மாட்டிவிட முடிவு செய்துள்ளார்.

இதன்படி நேற்று அதிக மது அருந்திய அவர் தனது நண்பரை அழைத்து பழவிளை செல்ல வேண்டும் என கூறியுள்ளார். அவர் ஹரிகரனை பைக்கில் அழைத்து சென்று பழவிளையில் விட்டுவிட்டு சென்றுவிட்டார். அங்கு சென்றபின் அவரது மாமனார் வீட்டின் முன் நின்று அடுத்தடுத்து ஆம்புலன்ஸ்க்கு ேபான் செய்தது தெரியவந்தது. போலீசார் அவரை தேடி வருகின்றனர். அவசரகால தேவைக்கு பயன்படுத்தப்படும் ஆம்புலன்ஸ் சேவையை தவறாக பயன்படுத்தியவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். இந்த சம்பவத்தால் நேற்று இரவு அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: