தங்கமணிக்கு நெருக்கமான தொழிலதிபர்கள் வீடு உட்பட 16 இடங்களில் விஜிலென்ஸ் ரெய்டு: சேலம், நாமக்கல், ஈரோட்டில் நடந்தது

சேலம்: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், அதிமுக மாஜி அமைச்சர் தங்கமணியின் உறவினர், நெருக்கமான தொழிலதிபர்கள் வீடு, அலுவலகங்களில் விஜிலென்ஸ் போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் 16 இடங்களில் நடந்த சோதனையால் பரபரப்பு நிலவியது. அதிமுகவின் அமைப்பு செயலாளரும், நாமக்கல் மாவட்ட செயலாளரும், முன்னாள் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சருமான தங்கமணி, வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.85 கோடி சொத்து சேர்த்ததாக அவர் மீதும், மனைவி சாந்தி, மகன் தரணிதரன் ஆகியோர் மீதும் நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதன் எதிரொலியாக கடந்த 15ம் தேதி தங்கமணிக்கு சொந்தமான வீடு, அலுவலகம், உறவினர்கள் வீடு, நண்பர்களின் வீடுகள், தொழிற்சாலைகள், பினாமிகளின் வீடு என்று 69 இடங்களில் விஜிலென்ஸ் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத பணம் ரூ.2 கோடியே 16 லட்சத்து 37 ஆயிரம் ரொக்கம், தங்க நகைகள் 1 கிலோ 130 கிராம், 40 கிலோ வெள்ளி, வங்கி லாக்கர் சாவிகள், கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்குகள் மற்றும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது. மேலும், கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்ததும் தெரியவந்தது.

இதனிடையே தங்கமணிக்கு சொந்தமான லாக்கர்களை விரைவில் திறந்து பார்க்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் தங்கமணிக்கு நெருக்கமான தொழிலதிபர்களின் வீடு, அலுவலகங்களில் நேற்று காலை 6 மணி முதல் மாலை வரை மீண்டும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் 16 இடங்களில் இந்த சோதனை நடந்தது. சேலம் திருவாக்கவுண்டனூரிலுள்ள அரசு ஒப்பந்ததாரரும், தங்கமணியின் நெருங்கிய நண்பருமான குழந்தைவேலுவின் மகன் தொழிலதிபர் மணிகண்டனின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடந்தது. சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கிருஷ்ணராஜன் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேபோல், நாமக்கல்லை சேர்ந்த தொழிலதிபர் தீபன்சக்கரவர்த்தி, பொத்தனூரை சேர்ந்த தொழிலதிபர் சண்முகம், கோழிப்பண்ணை அதிபர் மோகன், பொன்னேரி தொழிலதிபர் அசோக்குமார், கொல்லிமலை தொழிலதிபர் பெரியசாமி, நாமக்கல் மோகனூர் ரோட்டில் உள்ள ஸ்ரீனிவாசா கோழிப்பண்ணை தொழில் சார்ந்த நிறுவனம், பள்ளிபாளையம் டவுன் பகுதியில் காவேரி ஆர்எஸ் ரோடு கிருஷ்ண வேணி பஸ் ஸ்டாப் அருகேயுள்ள தங்கமணியின் நெருங்கிய உறவினரான ஆடிட்டர் செந்தில்குமாரின் பழைய மற்றும் புதிய அலுவலகம், பரமத்திவேலூரை அடுத்துள்ள கருங்கல்பட்டியில் உள்ள எஸ்எம்என் கோழிப்பண்ணை உட்பட 12 இடங்களில் சோதனை நடந்தது.

இதில் ஆடிட்டர் செந்தில்குமாரின் வீட்டுக்கு நேற்று காலை 6.30 மணியளவில் சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை அலுவலகத்துக்கு அழைத்துவந்து, சோதனையில் ஈடுபட்டனர். இவர் தங்கமணியின் கணக்குகளை பார்ப்பதாக கூறப்படுகிறது. பொத்தனூரை சேர்ந்த சண்முகம் என்பவர் சிமென்ட் பைப் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். நீரேற்று பாசன குத்தகைதாரராகவும் உள்ளார். இவர், பொத்தனூர் காவி சேலம், கோவை, நாமக்கல், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் 50 பேர் சோதனையில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாநகரில் ஈரோடு சத்தி ரோடு அருகே உள்ள சந்தான் காடு பகுதியில் பெயின்ட் மற்றும் கண்ணாடி விற்பனையக உரிமையாளரான குமார் என்ற கோபாலகிருஷ்ணன் வீடு, வில்லரம்சம்பட்டி அருகே ஒன்டிக்காரன்பாளையம் ஐஸ்வர்யா கார்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் செந்தில்நாதன் வீடு, செங்கோடம்பள்ளம் அருகே சக்தி நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பாலசுந்தரம் வீடு ஆகிய 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று சோதனை நடத்தினர். கோபாலகிருஷ்ணன், தங்கமணியின் மருமகன் தினேஷ்குமாரின் உறவினர். செந்தில்நாதன், தங்கமணியின் மகன் தரணிதரனின் கல்லூரி நண்பர். பாலசுந்தரம், தங்கமணியின் உறவினர் என கூறப்படுகிறது. சோதனையில் கணக்கில் வராத பல லட்சம் ரூபாய் மதிப்பிலான முக்கிய ஆவணங்களை போலீசார் கைப்பற்றி, மூவரிடமும் தீவிர விசாரணை நடத்தினர்.

இதேபோல் ஈரோட்டில் வீரப்பன்சத்திரம் சாந்தன்காடு, திண்டல் சத்யாநகர், வில்லரசம்பட்டி ஆகிய இடங்களில் உள்ள தங்கமணிக்கு நெருக்கமான தொழிலதிபர்கள் வீட்டில் ரெய்டு நடந்து வருகிறது. இங்கும் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடுகளில் நடந்த ரெய்டின் தொடர்ச்சியாக நேற்று (20ம்தேதி) இவ்வழக்கு தொடர்பான ஆவணங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் 16 இடங்களில் (நாமக்கல் மாவட்டம் 12, ஈரோடு 3, சேலம் 1) சோதனை மேற்கொள்ளப்பட்டது.  இதில் சான்று பொருட்களான பல வங்கிகளின் பாதுகாப்பு பெட்டக சாவிகள், மடிக்கணினிகள், கணினி ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் வழக்கிற்கு தொடர்புடைய ஆவணங்கள் ஆகியன கைப்பற்றப்பட்டன.  தொடர்ந்து புலன் விசாரணை நடக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: