பாண்டி மெரினா கடற்கரையில் மணல் வீடு கட்டும் போட்டி ஆர்வமுடன் பங்கேற்ற குழந்தைகள்

புதுச்சேரி :  பாண்டி மெரினா கடற்கரையில் மணல் வீடு கட்டும் போட்டியில் குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளை ஈர்க்க பாண்டி மெரினா அமைக்கப்பட்டுள்ளது. இங்கு உணவுப்பூங்கா, குழந்தைகளை மகிழ்விக்க பொழுதுபோக்கு விளையாட்டு அம்சங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பாண்டி மெரினா கடற்கரையில் குழந்தைகள் மணல் வீடு கட்டும் போட்டி நேற்று காலை நடந்தது.

நமது பாரம்பரிய விளையாட்டு கலைகளில் ஒன்றான மணல்வீடு கட்டும் கலையை இன்றைய குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தியும், பெற்றோர்களுக்கு அவர்களின் குழந்தை பருவத்தை மறுநினைவுப் படுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் 100க்கும் மேற்பட்ட பெற்றோர்கள், தங்களது குழந்தைகளுடன் குடும்பத்துடன் பங்கேற்று மணல் வீடுகளை கட்டினர்.

புதுச்சேரியின் பாரதி பூங்கா, லைட் ஹவுஸ், கடற்கரை, கோட்டை உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் மணல் வீடுகளை குழந்தைகள் தங்களது பெற்றோருடன் கட்டி மகிழ்ந்தனர். பாண்டி மெரினா நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற இப்போட்டியில் பல்வேறு கலைநயத்துடன் வீடுகள் கட்டப்பட்டு இருந்ததை நடுவர்கள் தேர்ந்தெடுத்தனர். முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2ம் பரிசாக ரூ.3 ஆயிரம், 3ம் பரிசாக ரூ.2 ஆயிரம் மற்றும் ஊக்கப்பரிசாக 10 பேருக்கு தலா ரூ.1000 வழங்கப்பட்டது. மேலும், பங்கேற்ற அனைத்து குழந்தைகளுக்கும் நினைவுப்பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது.

இந்தாண்டு தொடங்கிய இந்த மணல் வீடுகள் போட்டி வரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து நடத்தப்படும் என்றும், இதனால் பெரியவர் முதல் சிறியவர்கள் வரை நமது பாரம்பரிய மணல் வீடுகளை கட்டி உற்சாகம் அடைவார்கள் என்றும் தெரிவித்தனர்.

Related Stories: