செங்கம் அருகே தொடர் மழையால் சாலை சேதமடைந்து 3 வாரங்களாக பஸ் சேவை நிறுத்தம்: 50 மலை கிராம மக்கள் கடும் அவதி

செங்கம்: செங்கம் மலையடிவாரத்தில் தொடர் மழையால் சாலைகள் சேதமாகி இருப்பதால் 3 வாரங்களாக பஸ் சேவை நிறுத்தப்பட்டது. இதனால் 50 கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே உள்ள ஜவ்வாதுமலை கிராம மலையடிவார பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கடந்த மாதம் பெய்த தொடர் கனமழை காரணமாக அங்குள்ள பெரும்பாலான சாலைகள் ேசதமடைந்துள்ளது. மழை ஓய்ந்து பல நாட்களாகியும் இதுவரை மலை கிராம சாலைகளை சீரமைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபடவில்லை என கூறப்படுகிறது. சாலை பழுதால் கிராமங்களுக்கு சென்று வந்த ஒரே ஒரு அரசு டவுன் பஸ்சும் முன்னறிவிப்பின்றி 3 வாரங்களாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் கர்ப்பிணிகள், நோயாளிகள், முதியோர், விவசாயிகள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் என பல தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 4 கிமீ தூரம் நடந்து சென்று  கிளையூர் வந்து அங்கிருந்து பஸ் அல்லது இதர வாகனங்களில் லிப்ட் கேட்டு பயணிக்கும் நிலை உள்ளது.

இதுகுறித்து மலைவாழ் மக்கள் கூறுகையில், ‘தொடர் மழையின்போது வெள்ளப்பெருக்கு காரணமாக தரைப்பாலங்கள் துண்டிக்கப்பட்டன. அதன்பின்னர் சாலைகள் அனைத்தும் அடித்து செல்லப்பட்டன. தற்போது மண் சாலையாக உள்ளதால் டவுன் பஸ் கூட இயக்கப்படவில்லை. 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். இதுதொடர்பாக அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலையை சீரமைத்து மீண்டும் பஸ் இயக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: