விபத்து அதிகம் நடக்க ஓட்டுநரின் கவனக்குறைவே முக்கிய காரணம்: அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

சென்னை:  தமிழக பொதுப்பணிகள் நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை சார்பில், செங்கல்பட்டு மாவட்ட அலுவலர்களுடன் சாலைப்பாதுகாப்பு ஆய்வு கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று  நடைபெற்றது.  பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தாமோ அன்பரசன் ஆகியோர் இக்கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். இதில், ஆட்டோ சங்க நிர்வாகிகள், தனியார் பஸ் உரிமையாளர்கள், பொதுநலசங்கத்தினர்,  போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டு சாலை விபத்துகளை குறைப்பதற்கான ஆலோசனைகளை வழங்கினர்.

பின்னர், அமைச்சர்  எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது: ‘‘தமிழகத்தில் அதிகமாக மோட்டார் வாகன விபத்து ஏற்படும் மாவட்டமாக செங்கல்பட்டு உள்ளது. இதனை அறிந்து வருத்தமடைந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மாநிலம் முழுவதும் ஏற்படும் விபத்துகளையும், அதனால் ஏற்படும் உயிர் இழப்புகளையும் தடுக்க அனைத்துதுறை அதிகாரிகள், பொதுநல சங்கங்கள் இணைந்து ஆய்வுக்கூட்டங்களை மாவட்டம் தோறும் நடத்தி, அதற்கான காரணங்களை கண்டறிந்து முற்றிலுமாக விபத்தை தடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அதனால் முதலில் வ்கனங்கள் அதிகம் நிறைந்த நாமக்கல் மாவட்டத்நில் முதல் கூட்டம் நடத்தப்பட்டு, தற்போது செங்கல்பட்டிலும் நடந்துள்ளது.

சாலை விபத்துகள் அதிகம் நடக்க ஓட்டுனர்களின் கவனக்குறைவே முக்கிய காரணமாக விளங்குகிறது. இதனை தடுக்க ஓட்டுனர் லைசன்ஸ் வாங்கும் போது முழு பயிற்சி ஓட்டுனர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளதா? என அந்தந்த ஆர்டிஓக்கள் கண்காணிக்க வேண்டும். குடித்துவிட்டு வாகன ஓட்டுபவர்களை  போலீசாரும் கண்காணித்துதொடர்ந்து விபத்து ஏற்படுத்தும் ஓட்டுனர்களின் லைசன்சை பறிமுதல் செய்யவேண்டும். மாடுகளால் சாலை விபத்து ஏற்பட காரணமாக இருக்கும் உரிமையாளர்களை அந்தந்த மாவட்ட நிர்வாகமும், கால்நடைத்துறையும் இணைந்து நோட்டீஸ் கொடுத்து மாடுகளை பறிமுதல் செய்யவேண்டும்.  

விபத்தில் சிக்குபவர்களை தனியார் மருத்துவமனையில் சேர்க்கவும், அதற்கான நிதியை அரசே செலுத்தவும், அதற்கான இன்னுயிர் காக்கும்  திட்டத்தை  தமிழக முதல்வர் விரைவில் தொடங்கி வைக்கவுள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் விபத்தை குறைக்க எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. கிடப்பில் உள்ள சாலை மற்றும் பாலப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தாமதம் செய்யும் ஒப்பந்ததார்களின் காண்ட்ராக்ட் ரத்து செய்யவும், புதிய ஒப்பந்தம் போடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் ஒருவழிச்சாலைகள் இருவழிச்சாலையாகவும் இருவழிச்சாலைகள் 4 வழிச்சாலையாகவும் தரம் உயர்த்தப்படவுள்ளது.தாம்பரம் செங்கல்பட்டுவரை உள்ள நான்குவழிச்சாலை 8வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட்டு பணிகள் வேகமாக நடந்துவருகிறது.’’ என்றார். இந்நிகழ்ச்சியில்,  அதிகாரிகள் மற்றும் எம்எல்ஏக்கள்   க.சுந்தர்  இ.கருணாநிதி,வரலட்சுமி மதுசூதனன்  எஸ்.எஸ்.பாலாஜி மற்றும் அரசு அலுவலர்கள்  கலந்து கொண்டனர்.

Related Stories: