திருவண்ணாமலை மாவட்டத்தில் மஞ்சுவிரட்டு திருவிழா நடத்த அனுமதி வழங்க வேண்டும்-குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டரிடம் மனு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில் மஞ்சுவிரட்டு திருவிழா நடத்த அனுமதி வழங்கக்கோரி குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டரிம் மனு அளித்தனர்.

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் பா.முருகேஷ் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அதில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, திருமண உதவித்தொகை, சாதிச்சான்று உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 687 மனுக்கள் பெறப்பட்டது. கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும் படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் மார்கழி மாதம் முதல் தை மாதம் வரை கோயில்களில் மஞ்சுவிரட்டு திருவிழா நடத்துவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டும் நடத்துவதற்கு அனுமதி வழங்கிடக்கோரி திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர்வு கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்ட தமிழர் பாரம்பரிய வீர விளையாட்டு மஞ்சு விரட்டு மற்றும் ரசிகர்கள் பாதுகாப்பு சங்கத்தினர் மனு அளித்தனர்.

துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் பணிபுரியும் மஸ்தூர் பணியாளர்கள் தங்களுக்கு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள ஊதிய தொகையை வழங்கிடக்கோரி 20க்கும் மேற்பட்டோர் கோரிக்கை மனுவினை கலெக்டரிடம் வழங்கினர். அதேபோல், கீழ்பென்னாத்தூர் அடுத்து அண்டம்பள்ளம் கிராமத்தில் ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற கோரியும், நீர் பிடிப்பு பகுதியில் வசிப்பவர்களை காலிசெய்ய கால அவகாசம் வழங்கக்காரியும் கிராம பொதுமக்கள் மனு அளிக்க வந்தனர். மேலும், கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மண்ணெண்ணெய் கேனுடன் வந்த தாய், மகன்

கீழ்பென்னாத்தூர் அடுத்த காட்டுமலையனூர் கிராமத்ைத சேர்ந்த அருள்குமார் தனது தயாருடன் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார். அப்போது பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் அவர்களிடமிருந்த பையை சோதனை செய்தனர். அதில் மண்ணெண்ணெய் பாட்டில் இருப்பது தெரிந்தது. இதையடுத்து மண்ணெண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்து விசாரித்தனர்.

அப்போது, அவர்கள் எங்களது சொத்தை ஏமாற்றி எழுதி பெற்றுக்கொண்ட நபரிடமிருந்து, மீண்டும் சொத்தை மீட்டுத்தரக்கோரியும், எங்களுக்கு கொலை மிரட்டல் விடுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளிக்க வந்ததாகவும், பின்னர் தீக்குளிக்க திட்டமிட்டதாகவும் தெரிவித்தனர்.பின்னர், போலீசார் மண்ணெண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்து அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். தாய், மகன் மண்ணெண்ணெய் கேனுடன் வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: