திருவண்ணாமலை மாவட்டத்தில் மழை குறைந்ததால் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,723 கன அடியானது

திருவண்ணாமலை : வடகிழக்கு பருவமழையின் தீவிரம் மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால், திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழை பெய்தது. அதனால், ஏரிகள், குளங்கள், பாசன கிணறுகள் உள்ளிட்ட நீர்நிலைகள் அனைத்தும் முழுமையாக நிரம்பியுள்ளன. மேலும், அணைகளும் முழு கொள்ளளவு எட்டியது.

இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக மழையின் தீவிரம் குறைந்திருக்கிறது. மாவட்டத்தில் நேற்று பதிவான மழை அளவின்படி அதிகபட்சமாக வெம்பாக்கத்தில் 33 மி.மீ மழை பதிவானது. மேலும், ஆரணி 27 மி.மீ, செய்யாறு 19 மி.மீ, செங்கம் 4.20 மி.மீ, ஜமுனாமரத்தூர் 9 மி.மீ, வந்தவாசி 8 மி.மீ, போளூர் 21.20 மி.மீ, திருவண்ணாமலை 1.10.மி.மீ, தண்டராம்பட்டு 6 மி.மீ, கலசபாக்கம் 3 மி.மீ, சேத்துப்பட்டு 10.20 மி.மீ, கீழ்பென்னாத்தூர் 3.40 மி.மீ மழை பதிவானது.

இதைத்தொடர்ந்து சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 99 அடியாக உள்ளது. அணையின் மொத்த நீர்மட்டம் 119 அடி. ஆனால், மதகுகள் சீரமைப்பு காரணமாக அதிகபட்சம் 99 அடி மட்டுமே நீர் நிரம்ப முடியும் என்ற நிலை உள்ளது. எனவே, அணைக்கு வரும் தண்ணீரை தொடர்ந்து வெளியேற்றி வருகின்றனர். அதன்படி, அணைக்கு வினாடிக்கு 2,723 கன அடி தண்ணீர் வருகிறது.

எனவே, அணையில் இருந்து 2,723 கன அடி தண்ணீர் தென் பெண்ணை வழியாக வெளியேற்றப்படுகிறது. மேலும், சாத்தனூர் அணைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்புவரை அதிகபட்சம் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் வந்து கொண்டிருந்தது. தற்போது, கிருஷ்ணகிரி அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் அளவு வினாடிக்கு 822 கன அடியாக குறைந்திருக்கிறது.

மேலும், தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதியிலும் மழை குறைந்திருக்கிறது. எனவே, சாத்தனூர் அணைக்கு வரும் தண்ணீர் குறைந்திருக்கிறது என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். இதையடுத்து குப்பனந்தம் அணையின் நீர்மட்டம் 57.40 அடியாவும், கொள்ளளவு 656 மி.கன அடியாகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 150 கன அடி தண்ணீர் வருகிறது.

மிருகண்டா அணையின் நீர்மட்டம் 20.83 அடியாகவும், கொள்ளளவு 75.302 மி.கன அடியாகவும் உள்ளது. செண்பகத்தோப்பு அணையின் நீர்மட்டம் 55.30 அடியாகவும், கொள்ளவு 217.372 அடியாகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 240 கன அடி தண்ணீர் வருகிறது. மேலும், அணையில் இருந்து 136 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Related Stories: