வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் மீண்டும் புகுந்த அகழிநீர்: நேற்றுவரை அகற்றியும் பயனில்லை

வேலூர்: வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் நேற்று மாலை தண்ணீர் முழுவதுமாக அகற்றிய நிலையில் நள்ளிரவு முதல் மீண்டும் அகழியின் உபரிநீர் கோயிலுக்குள் சூழ்ந்துள்ளது. இதனால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். சமீபத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக வேலூர் கோட்டை அகழி முழுவதுமாக நிரம்பியது. இதனால் அகழியின் உபரிநீர் நிலவறை பாதைகளின் வழியாக கோயில் வளாகத்தில் சூழ்ந்து  நின்றது. முழங்கால் அளவு நின்ற நீரால் கோயிலில் வழக்கமான பூஜைகளுக்கு இடைஞ்சல் ஏற்பட்டது.

இதன் காரணமாக பக்தர்களுக்கு கோயில் கருவறையில் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. கோயில் உற்சவ மூர்த்திகளை ராஜகோபுரத்தில் வைத்து வழக்கமான பூஜைகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் கோயில் வளாகத்தில் சூழ்ந்த தண்ணீரை மோட்டார்கள் மூலம் உறிஞ்சி அகழியில் விடும் பணி கடந்த 3 நாட்களாக நடந்து வந்தது. இப்பணி நேற்று இரவு 9 மணி வரை நீடித்தது. இதன் காரணமாக கோயிலில் சேர்ந்த தண்ணீர் முழுவதும் வடிந்தது. இதையடுத்து உடனடியாக பாசிபடர்ந்த தரையை சுத்தம் செய்யும் பணி நடந்தது.

இப்பணி நிறைவடைந்த பிறகு பக்தர்கள் வழக்கம்போல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நள்ளிரவு முதல் தொடர்ந்து தண்ணீர் கோயிலுக்குள் வந்தது.

இந்நிலையில் இன்று காலை 6 மணிக்கு கோயில் ஊழியர்கள் கோயிலுக்கு வந்தபோது உட்பிரகாரத்தில் மீண்டும் தண்ணீர் ஒரு அடி வரை தேங்கி நின்றதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். வேறு வழியின்றி மீண்டும் மோட்டார் மூலம் தண்ணீர் இறைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. பூஜைகளும் ராஜகோபுரத்தில் வைக்கப்பட்ட உற்சவ மூர்த்திகளுக்கு தொடர்ந்து நடந்தது. இது பக்தர்களையும், கோயில் ஊழியர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories: