வலைத்தளங்களில் சர்ச்சை பதிவு யூடியூபர் மாரிதாஸ் கைது: பாஜ - போலீசாரிடையே தள்ளுமுள்ளு

மதுரை: சமூக வலைத்தளங்களில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கருத்து பதிவிட்டதாக யூடியூபர் மாரிதாஸை போலீசார் கைது செய்தனர். இதில் போலீசாருக்கும், பாஜவினருக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  மதுரை கடச்சனேந்தல் குடிநீர் வடிகால் வாரியம் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் யூடியூபர் மாரிதாஸ். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ராணுவ ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக சர்ச்சைக்குரிய பதிவை வெளியிட்டிருந்தார். இதுதொடர்பான விசாரணைக்காக அண்ணா நகர் உதவி கமிஷனர் சூரக்குமார், புதூர் இன்ஸ்பெக்டர் துரைபாண்டி ஆகியோர் தலைமையில் போலீசார் நேற்று மதியம் மாரிதாஸ் வீட்டிற்கு சென்றனர். சம்மன் தரப்பட்டு, அவரை விசாரைணக்கு அழைத்தும், அங்கிருந்த பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவரை போலீசார் புதூர் காவல்நிலையம் அழைத்து வந்தனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.  பிறகு,  பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் மாரிதாஸ் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து காவல்நிலையம் வந்த பாஜவினர், மாரிதாஸின் கைதிற்கு எதிர்ப்பு தெரிவித்து, காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். மேலும், பாஜ மாவட்டத் தலைவர் டாக்டர் சரவணன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் போலீசாருக்கும், கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மாரிதாஸிடம் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: