3 மதகுகள் மூலம் உபரி நீர் திறப்பு: மணிமுத்தாறு அணை நிரம்பியது

அம்பை: நெல்லை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகள் அமைந்துள்ளன. இந்த அணைகள் வடகிழக்குப்பருவ மழை காலத்தில் நிரம்புவது வழக்கம். கடந்த 10 நாட்களுக்கு முன்பு கன மழை பெய்த போது மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருந்தது. இதையடுத்து மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென அதிகரித்தது. மணிமுத்தாறு அணை 115.50 அடியை எட்டிய நிலையில் 80அடி பிரதான கால்வாயில் பாசனத்திற்காக கடந்த டிச.4ம் தேதி சபாநாயகர் அப்பாவு தலைமையில் தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று காலை நிலவரப்படி 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை 117.60 அடியாக உயர்ந்தது.

இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் தலைவாய்க்கால் மூலம் வினாடிக்கு 400 கன அடியும், ஓடை மூலம் 5 கன அடியும் வெளியேற்றப்பட்டது.  தொடரந்து அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அண்ணாத்துரை, உதவி செயற்பொறியாளர் தங்கராசு, உதவி பொறியாளர்கள் முருகன், மாரியப்பன் ஆகியோர் முன்னிலையில் மதியம் 1 மணிக்கு 3 மறுகால் அணைக்கதவுகள் மட்டும் திறக்கப்பட்டு வினாடிக்கு 1000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மணிமுத்தாறு அணை நிரம்பியதால் அப்பகுதி மக்களும், விவசாயிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதை அடுத்து மணிமுத்தாறு பேரூராட்சி நிர்வாகம் பிரசார வாகனத்தின் மூலம் அருகிலுள்ள கரையோர மக்களை பாதுகாப்பாக இருக்கும் படி எச்சரிக்கை அறிவிப்பு விடுத்துள்ளது.

Related Stories: