சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் திருச்சானூர் கோயிலில் பிரமோற்சவம் நிறைவு: இன்று மாலை புஷ்ப யாகம்

திருமலை: திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோயிலில் கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் வருடாந்திர பிரமோற்சவம் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு வாகனங்களில் சுவாமி அருள்பாலித்தார். பத்மாவதி தாயாரின் பிறந்தநாளுக்கு ஏழுமலையான் சீர்வரிசை அனுப்பி வைக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதையொட்டி, நேற்று அதிகாலை 4.30 மணியளவில் ஏழுமலையான் கோயில் கருவறையில் இருந்து மஞ்சள், குங்குமம் போன்றவையும், பிரசாத வகைகளும் திருச்சானூர் கொண்டு வரப்பட்டது. பின்னர், தாயாருக்கு கற்பூர ஆரத்தி காண்பித்து நைவேத்யம் சமர்ப்பிக்கப்பட்டது.

இதையடுத்து தாயாருக்கும், சக்கரத்தாழ்வாருக்கும் திருமஞ்சனம் முடிவு பெற்ற பின், கோயிலுக்குள் அமைக்கப்பட்ட சிறப்பு தொட்டியில் 3 முறை சக்கரத்தாழ்வாரை திருக்குளத்தில் மூழ்க வைத்து தீர்த்தவாரி வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்றது. இரவு 9 மணிக்கு பிரம்மோற்சவம் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, கொடிமரத்தில் இருந்து யானைக் கொடி இறக்கப்பட்டது. திருச்சானூர் ேகாயிலில் இன்று மாலை 3 மணி முதல் 5 மணி வரை பத்மாவதி தாயாருக்கு பல்வேறு மலர்களால் புஷ்ப யாகம் நடத்தப்பட உள்ளது. பிரம்மோற்சவத்தின் போது தெரிந்தோ தெரியாமலோ செய்த தவறுகளுக்கும், தோஷங்களுக்கு பரிகாரமாக இந்த புஷ்பயாகம் நடத்தப்பட உள்ளது.

Related Stories:

More