விஜயகாந்த், பிரபு படங்களை இயக்கியவர் சாலையோரம் அனாதையாக கிடந்த டைரக்டர் தியாகராஜன் சடலம்

சென்னை: திரைப்பட இயக்குனர் எம்.தியாகராஜன் மரணம் அடைந்தார். அவரது சடலம், சாலையோரம் அனாதையாக கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பிரபு நடித்த வெற்றி மேல் வெற்றி, விஜயகாந்த் நடிப்பில் ஏவிஎம் தயாரித்த மாநகர காவல் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் எம்.தியாகராஜன். அருப்புக்கோட்டையை சேர்ந்த இவர், திரைப்பட கல்லூரியில் டைரக்‌ஷன் கற்றவர். பட வாய்ப்பு இல்லாததால் சொந்த ஊருக்கே சென்றார். அப்போது விபத்தில் சிக்கி, கோமா நிலைக்கு சென்றார். பிறகு குணமாகி, மீண்டும் திரைப்படம் இயக்கும் ஆசையுடன் சென்னை வந்தார். ஆனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதனால் சென்னை வடபழனியிலுள்ள ஏவிஎம் ஸ்டுடியோ அருகே சாலையோரம் தங்கியுள்ளார். அந்த பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் சாப்பிட்டு வந்துள்ளார். இந்நிலையில் திடீரென உடல் நலம் குன்றிய அவர், சாலையோரம் நேற்று அதிகாலை இறந்து கிடந்தார். தகவல் அறிந்து போலீசார் வந்து ஆம்புலன்சில் அவரது உடலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திரைத்துறையில் ஒரு காலத்தில் சாதித்த இயக்குனர், படவாய்ப்பு இல்லாமல் சாலையோரம் வாழ்ந்து அங்கேயே இறந்துபோனது சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

More