சாப்பிட்டதற்கு பணம் கேட்டதால் ஆத்திரம் வியாபாரிகள் சங்க தலைவர் உள்பட 3 பேருக்கு சரமாரி அடி: 10 பேர் கும்பலுக்கு போலீஸ் வலை

செங்கல்பட்டு: உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு பணம் தராத கும்பலால் வாக்குவாதம் முற்றி உரிமையாளர், அவரது மனைவி மற்றும் வணிக சங்க பேரமைப்பின் தலைவருக்கு சரமாரி அடி விழுந்தது. இதனை கண்டித்து, வியாபாரிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மறைமலைநகர் அருகே பொத்தேரியை சேர்ந்தவர் காஜாமொய்தீன் (40). அதே பகுதியில் பாஸ்ட்புட் உணவகம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் நடந்த இறுதி சடங்கில் பலர் கலந்து கொண்டனர். அதில், சுமார் 10 பேர், காஜா மொய்தீன் கடைக்கு சென்று உணவு சாப்பிட்டனர். ஆனால், அதற்கான பணத்தை தரவில்லை.

இதை கேட்டபோது, காஜா மொய்தீனுக்கும், அவர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கும்பல், காஜாமொய்தீன் மற்றும் அவரது மனைவியை அங்கிருந்த இரும்பு வாளியால் சரமாரியாக தாக்கினர். அதில் அவர்கள் படுகாயமடைந்தனர். இதையறிந்ததும், பொத்தேரி வியாபாரிகள் சங்க தலைவர் பூட்டோ, அங்கு சென்று, அந்த கும்பலிடம் தட்டிக் கேட்டார். ஆனால், அந்த கும்பல், பூட்டோவின் தலையில் சரமாரியாக தாக்கியதால் அவரும்  படுகாயமடைந்தார். இதனால், அப்பகுதியில் உள்ள அனைத்து வியாபாரிகளும் திரண்டனர். உடனே அங்கிருந்த 10 பேர், தப்பிவிட்டனர்.

இதையடுத்து, படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு, அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. புகாரின்படி மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், போலீசாரின் மெத்தனப் போக்கை கண்டித்து, நேற்று காலை மறைமலைநகர், பொத்தேரி, கூடுவாஞ்சேரியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதையடுத்து வணிக சங்க பேரமைப்பின்  மாவட்ட தலைவர் இந்திரஜித், மாவட்ட செயலாளர் துரைராஜ், மாநில துணை தலைவர் உத்திரகுமார் உள்பட 500க்கும் மேற்பட்ட வியாபாரிகள், பொத்தேரி ஜிஎஸ்டி சாலையோரத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதாக உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories: