துணிச்சலான மகனை தேசம் இழந்து விட்டது...: ஜனாதிபதி, பிரதமர் மோடி, ராகுல் அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல்

நாட்டின் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மரணத்துக்கு, ஜனாதிபதி, பிரதமர் மோடி,ராகுல் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: ஜெனரல் பிபின் ராவத்தின் அகால மறைவு குறித்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளேன். தேசம் அதன் துணிச்சலான மகன்களில் ஒருவரை இழந்துவிட்டது. தாய்நாட்டிற்காக அவரது 40 ஆண்டுகால தன்னலமற்ற சேவை, விதிவிலக்கான வீரம் மற்றும் விவேகத்தால் குறிக்கப்பட்டது. அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு: இந்த சம்பவம் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த துயரமான நேரத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு பிரார்த்திக்கிறேன்.பிரதமர் மோடி: ஹெலிகாப்டர் விபத்தில் ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்களை இழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. அவர்கள் மிகவும் விடாமுயற்சியுடன் தேசத்திற்காக  சேவை செய்தனர். ராவத் சிறந்த ராணுவ வீரர், உண்மையான தேசபக்தர். ஆயுதப்படையை நவீனமயமாக்குவதில் பெரிதும் பங்களித்தார். ராணுவ விவகாரங்களில் அவரது நுண்ணறிவு, தொலைநோக்கு பார்வைகள் விதிவிலக்கானவை. அவரது சிறப்பான சேவையை இந்தியா ஒருபோதும் மறக்காது. பலியானோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

ராகுல் காந்தி (காங். முன்னாள் தலைவர்): ஜெனரல் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுவரை நடக்காத சோக சம்பவம் இது. இந்த கடினமான நேரத்தில் பலியானோரின் குடும்பத்தினர்களுக்கு துணை நிற்போம்.

ராஜ்நாத் சிங் (பாதுகாப்பு அமைச்சர்): உயிரிழந்த அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். இந்த துயரத்தில் இந்தியா ஒன்றுபட்டு நிற்கிறது. ராவத்தின் இழப்பு நமது ராணுவத்திற்கும் நாட்டிற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.அமித்ஷா (ஒன்றிய உள்துறை அமைச்சர்): இது தேசத்திற்கு மிகவும் சோகமான நாள். ராவத், தாய்நாட்டிற்கு மிகுந்த பக்தியுடன் சேவை செய்த துணிச்சலான வீரர்களில் ஒருவர். அவரது முன்மாதிரியான பங்களிப்புகள் மற்றும் அர்ப்பணிப்பு வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நான் மிகவும் வேதனைப்படுகிறேன்.தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி:  குன்னூர் அருகே விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் லக்ஷ்மண் சிங் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் பிற பாதுகாப்புப் பணியாளர்களின் சோகமான மறைவு குறித்து நான் மிகுந்த அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன். அவரது மறைவு இந்தியாவுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். இந்தியா தனது துணிச்சலான மகனை இழந்துள்ளது.

ஜெனரல் பிபின் ராவத்தை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன்:தலைமுறை தலைமுறையாக இந்திய ராணுவப்பணியில் ஈடுபட்டிருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த பிபின் ராவத் தமிழ் மண் விபத்தில் உயிரிழந்தது மிகுந்த மன வருத்தத்தை அளிக்கின்றது. அவரது இழப்பு இந்திய ராணுவத்திற்கும், நாட்டிற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: இந்தியாவின் பாதுகாப்பில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு உயர் பொறுப்பிற்கு வந்த முப்படை தளபதி உள்ளிட்ட ராணுவ உயர் அதிகாரிகள் ஹெலிகாப்டர் விபத்தில் பலியானது ஈடு செய்யவே முடியாத பேரிழப்பாகும். இந்திய ராணுவம் இத்தகைய இழப்புகளை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்று தெரியவில்லை. மிகுந்த துயரத்தையும், வேதனையையும் தருகிற இந்த செய்தி நாட்டு மக்களையே உலுக்கியுள்ளது.அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ்: இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவருடை மனைவி, மேலும் சில ராணுவ உயர் அதிகாரிகளும் பயணித்த ஹெலிகாப்டர் விமானம் விபத்துக்குள்ளாகி, அவர்களில் பைலட் தவிர மற்ற 13 பேர் மரணமடைந்துவிட்டனர் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயரம் அடைந்தோம். அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறோம். அவர்களின் குடும்பங்களுக்கும், உறவினர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: முப்படைத் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 13 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.பாமக நிறுவனர் ராமதாஸ்: இந்திய முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் இந்திய விமானப்படை வீரர்கள் 11 பேர் குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்கள் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் அடைந்தேன். ஜெனரல் பிபின் ராவத் மறைவு நாட்டிற்கும், பாதுகாப்பு படைகளுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரையும் அவரது மனைவியையும் இழந்து வாடும் அவர்களின் குடும்பங்களுக்கும்,  இவ்விபத்தில் உயிரிழந்த மற்ற 11 வீரர்களின் குடும்பங்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த கேப்டன் வருண்சிங் விரைந்து முழு நலம் பெற விழைகிறேன்.

பாஜக தலைவர் அண்ணாமலை: துரதிர்ஷ்டவசமாக ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் வீரர்களின் திடீர் மரணம் ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது. நமது ராணுவத்தின் தளபதியாக, முப்படை தலைமைத் தளபதியாக மிகத் திறம்பட செயலாற்றியவர். அவருடைய இந்த துயர மரணம் நம்முடைய நாட்டிற்கு பேரிழப்பு. இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், காங்கிரஸ் திருநாவுக்கரசர், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன்,  புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், இந்திய ஜனநாயகக் கட்சி, பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா, எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: