ஓய்வு பெற்ற வங்கி மேலாளர், விவசாயி வீட்டில் ₹4 லட்சம் ரொக்கம் 64 கிராம் தங்க நகை திருட்டு

* மர்மநபர்களுக்கு போலீஸ் வலை

* திருப்பதியில் பரபரப்பு

திருப்பதி : திருப்பதியில் ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் மற்றும் விவசாயி வீட்டில் ₹4 லட்சம் ரொக்கம் மற்றும் 64 கிராம் தங்க நகையை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். அடுத்தடுத்து இரு இடங்களில் திருட்டு நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பதி அடுத்த திருச்சானூரை சேர்ந்தவர் பிரசன்னகுமார், ஓய்வு பெற்ற வங்கி மேலாளர். இவர் தனது குடும்பத்துடன் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.

இவர்கள் அனைவரும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தெலங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்திற்கு சென்றனர். பின்னர், நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே உள்ளே சென்று பார்த்தபோது  பீரோ உடைத்து அதிலிருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும், பீரோவிலிருந்து 52 கிராம் தங்க நகை மற்றும் ₹4 லட்சத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து பிரசன்னகுமார் திருச்சானூர் போலீசில் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கைரேகை நிபுணர்கள்   ஆதாரங்களை சேகரித்து சென்றனர். திருடர்கள் அப்பார்ட்மெண்டில் உள்ள சிசி கேமரா  ஹார்ட் டிஸ்க் பதிவையும் திருடிச்சென்றுள்ளனர்.

திருப்பதி எம்.ஆர்.பள்ளி அடுத்த கொப்பரவந்தபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார், விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது, மேல்மாடியில் உள்ள அறையில் சத்தம் கேட்டதாம். உடனே, அங்கு சென்றபோது பீரோ திறந்து இருந்தது. மேலும், அதிலிருந்த 12 கிராம் தங்க நகை மற்றும் ₹1,500ஐ மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து விஜயகுமார் எம்.ஆர்.பள்ளி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பதியில் அடுத்தடுத்து இரு இடங்களில் திருட்டு நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: