மணப்பாறை அருகே தரைப்பாலத்தை மூழ்கடித்த ஆற்றுநீர் ஆபத்துடன் கடக்கும் மாணவர்கள்

மணப்பாறை : மணப்பாறை அருகே தரைப்பாலத்தை கடந்து ஆர்ப்பரித்து செல்லும் நீரில் ஆபத்தின் உச்சத்தில் நிர்பந்தமான சூழ்நிலையில் மாணவ, மாணவிகள் ஆற்றை கடக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.மணப்பாறை பகுதியில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி ஆறுகளில் நீர் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 27.46 செ.மீ. பெய்த கனமழையால் ஆறுகளில் மேலும் நீர் அதிகரித்து செல்வதுடன் சில இடங்களில் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டுள்ளது. அதன்படி சமுத்திரம் பகுதியில் உள்ள தரைப்பாலத்தை கடந்து நீர் சென்று கொண்டிருக்கிறது.

சமுத்திரத்தை சுற்றியுள்ள 3 தரைப்பாலங்களையும் நீர் கடந்து செல்லும் நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், அவசர தேவைக்கு செல்வோர் என ஆயிரத்திற்கும் அதிகமாக மக்கள் ஆபத்தின் உச்சம் என தெரிந்தும் வேறு வழியின்றி அதிவேகமாக செல்லும் நீரை கடந்து செல்ல வேண்டிய நிர்பந்த சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் பாலம் அமைத்து தந்திட என்ற கோரிக்கை பல ஆண்டுகளாகவே நீடித்தாலும் அது கோரிக்கையாகவே இருந்து வருவதால் இன்று மக்கள் உயிரை பனையம் வைத்து ஆற்றை கடக்க வேண்டிய வேதனையான நிகழ்விற்கு தள்ளப்பட்டுள்ளனர். இதே போல் சித்தாநத்தம் பகுதியில் செல்லும் அரியாற்றிலும் தரைப்பாலத்தை கடந்து சுமார் 3 அடிக்கு மேல் நீர் செல்வதால் அந்த கிராமமே தீவு போல் மாறி உள்ளது. அந்த பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பொதுமக்கள் என அனைவரும் சுமார் 5 கி.மீ. சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Related Stories: