கமுதி அருகே காட்டாற்று வெள்ள பாலத்தில் சிக்கி தவித்த பள்ளி வேன்-உயிர் தப்பிய மாணவ,மாணவிகள்

சாயல்குடி : கமுதி அருகே செய்யாமங்கலத்தில் காட்டாற்று வெள்ளம் செல்லும் பாலத்தில் பள்ளி வாகனத்தை இயக்கியதால் விபத்தில் சிக்கியது. வைகை அணையிலிருந்து ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக கடந்த 27ம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. கமுதி, கடலாடி, முதுகுளத்தூர் பகுதி பாசனத்திற்காக பார்த்திபனூர் பரளையாறு மதகு திறந்து விடப்பட்டு கிருதுமால்நதி ஓடை, குண்டாறு வழித்தடங்களில் காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு வந்து கொண்டிருக்கிறது.

கமுதி அருகே செய்யாமங்கலம், தாதனேந்தல், பிரண்டைகுளம், புதுப்பட்டி, முனியனேந்தல் உள்ளிட்ட  கிராமங்களுக்கு செல்லும் வழித்தடத்தில் உள்ள தரைப்பாலத்தில் கடந்த 10 நாட்களாக முழங்கால் உயரத்திற்கு மேல் கட்டாற்று வெள்ளம் செல்கிறது. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள். மருத்துவமனை உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு கூட கமுதி உள்ளிட்ட வெளியூர் செல்ல முடியாமல் கிராமத்திலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.

வெளியூர் பள்ளிகளில் படிக்கும் இப்பகுதி மாணவர்கள் செய்யாமங்கலம் விலக்கு ரோட்டிற்கு செல்ல வேண்டும் என்பதால் பாலத்தில் கயிரை கட்டி பெற்றோர் தூக்கிச்சென்று கரையை கடத்தி விட்டனர். இதனை தொடர்ந்து மாவட்டத்தில் மழை பெய்தாலோ, பள்ளி வளாகம், செல்லும் வழிகளில் தண்ணீர் தேங்கி நின்றால் அல்லது மழை, தண்ணீரால் மாணவர்களுக்கு இடையூறு, அபாயம் ஏற்பட்டதால் பள்ளிக்கு விடுமுறை அளிக்கலாம். மீறி மாணவர்களை பள்ளிக்கு வரச்சொன்னால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று தண்ணீர் அளவு சற்று குறைந்ததாக கூறப்படுகிறது. இதனால் பசும்பொன்னில் உள்ள தனியார் பள்ளி வாகனம் ஒன்று செய்யாமங்கலம் உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று 25 மாணவ,மாணவிகளை ஏற்றிக்கொண்டு திரும்பியுள்ளது. அப்போது வெள்ளம் சென்றுகொண்டிருக்கும் பாலத்தில் வாகனம் வரும்போது வெள்ளத்தில் சிக்கியது. இதனால் குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த கிராமமக்கள் குழந்தைகளை பத்திரமாக மீட்டனர்.

பிறகு சிக்கிய வாகனத்தை மீட்டு பாலத்தை கடந்து விட்டனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் உத்தரவை மீறி, கவனகுறைவாக இருந்த தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் கேட்டபோது, ‘‘கனமழை காலத்தில் பள்ளிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து ஏற்கனவே எச்சரிக்கையுடன் கூடிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதனை மீறி கவன குறைவாக செயல்பட்ட பள்ளி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவித்தார்.

Related Stories: