டிக்கெட் எடுக்க சொன்னதால் ஆத்திரம் அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய போலீஸ்காரர்: போக்குவரத்து ஊழியர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு: அரசு பஸ்சில் பயணம் செய்வதற்கு, டிக்கெட் எடுக்க சொன்னதால், ஆத்திரமடைந்த போலீஸ்காரர், கண்டக்டரை தாக்கினார். இதனால், போக்குவரத்து ஊழியர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி செங்கல்பட்டில் பரபரப்பு நிலவியது.செங்கல்பட்டு புதிய பஸ் நிலையத்தில் இருந்து மாமல்லபுரம் செல்லும் அரசு பஸ்சில் கண்டக்டராக முருகேசன் (55) என்பவர் பணியாற்றுகிறார். நேற்று காலை முருகேசன் பணியில் இருந்தார். அப்போது, பஸ்சில் இருந்த பயணிகள் அனைவருக்கும்  டிக்கெட் கொடுத்துவிட்டு, இறுதியாக ஒருவரிடம், டிக்கெட் எடுக்கும்படி கூறியுள்ளார். அதற்கு அவர், நான் போலீஸ்காரர். டிக்கெட் எடுக்க முடியாது என  கூறியுள்ளார். உடனே, முருகேசன், நீங்கள் சீருடை இல்லாமல் இருக்கிறீர்கள். அதனால், வாரண்ட் காப்பி அல்லது  அடையாள அட்டை காண்பிக்க வேண்டும் கேட்டார்.

அதற்கு அந்த பயணி, என்னிடம் வாரண்ட் காப்பி கிடையாது. அடையாள அட்டையை காண்பிக்க முடியாது என, மிரட்டலாக பதில் அளித்துள்ளார். இதையடுத்து முருகேசன், நீங்கள் பயணம் செய்ய முடியாது. கீழே இறங்குங்கள் என கூறினார். இதனால், ஆத்திரமடைந்த அப்பயணி,  நடத்துனரை  சரமாரியாக தாக்கினார். உடனே, அங்கிருந்த பொதுமக்கள், அவரை தடுத்து நிறுத்தினர். இதுபற்றி அறிந்ததும், சக அரசு பஸ் கண்டக்டர்கள், டிரைவர்கள் ஆங்காங்கே பஸ்களை நடுரோட்டில் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பஸ் நிலையத்தில் உள்ள அனைத்து பஸ்களும் இயக்காமல், அந்த பயணியை முற்றுகையிட்டு, தகராறில் ஈடுபட்டனர்.இதனால், பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து, செங்கல்பட்டு டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அந்த பயணியிடம் விசாரித்தனர். அதில், அவர் ஹரிதாஸ் என்பதும், மாமல்லபுரம் காவல் நிலையத்தில், காவலராக பணியாற்றுவதும் தெரிந்தது. இதையடுத்து போலீசார், ஹரிதாஸ் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். மேலும், கண்டக்டர் முருகேஷிடம், மன்னிப்பு கேட்க வைத்தனர். தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories:

More