தனியார் மெட்ரிக் பள்ளியை சூறையாடிய பஜ்ரங் தள் அமைப்பினர்:வாட்ஸ் அப்பில் பரவிய செய்தியால் பள்ளிக்குள் புகுந்து தாக்குதல்!!...

போபால்: மத்தியப்பிரதேசத்தில் மாணவர்களை மதம் மாற்றியதாக குற்றம் சாட்டி தனியார் பள்ளி ஒன்றின் மீது ஆர்.எஸ்.எஸ் மற்றும் பஜ்ரங் தள் அமைப்பினர் பயங்கர தாக்குதல் நடத்தினர். விதிஷா மாவட்டத்தில் உள்ள    கஞ்ச் பசோடா டவுன் புனித ஜோசப் மெட்ரிகுலேஷன்  பள்ளியில் தான் இந்த  தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கிறிஸ்துவ மிஷினரி அமைப்பினரால் நடத்தப்படும்  இந்த பள்ளியில் நேற்று பிளஸ் 2 மாணவர்களுக்கான கணித பாட தேர்வு நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது உள்ளே புகுந்த ஏராளமான  பஜ்ரங் தள் அமைப்பினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அங்கிருந்து ஓடி உயிர் தப்பினர்.

8 மாணவர்களை பள்ளி நிர்வாகமே மதம் மாற்றியதாக சமூகவலை தளங்களில் செய்திகள் பரவின. இதை நம்பிய ஆர்.எஸ்.எஸ் -ன்  துணை அமைப்பான  பஜ்ரங் தள் இளைஞர்கள் பள்ளிக்குள் புகுந்து கண்ணாடிகளை அடித்து உடைத்தனர். ஆனால் இந்த குற்றசாட்டை திட்டவட்டமாக மறுத்த பள்ளி நிர்வாகம் புரளியை நம்பி தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக  புகார் தெரிவித்துள்ளது.  தங்கள் மீது குற்றம் சாட்டுபவர்கள் எந்த மாணவரின் பெயரையும் குறிப்பிடாதது ஏன்? என்று பள்ளி நிர்வாகம்  கேள்வியை எழுப்பியுள்ளது.

போலீசார்க்கு முன்கூட்டியே தகவல் அளித்தும் தங்களுக்கு அவர்கள் பாதுகாப்பு அளிக்கவில்லை என்று பள்ளி நிர்வாகம்  தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இதனிடையே மதமாற்றம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டால் பள்ளிக்கூடத்தையே இடித்து தள்ள போவதாக  பஜ்ரங் தள் அமைப்பினர் சவால் விடுத்துள்ளனர்.          

Related Stories:

More