ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டு சிறை: மியான்மர் நீதிமன்றம் உத்தரவு

பாங்காங்: மியான்மரில் ராணுவத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஆங் சான் சூகிக்கு எதிரான 2 வழக்கில் அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மியான்மர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மியான்மர் நாட்டில் கடந்தாண்டு நவம்பரில் பொது தேர்தலில் ஆங் சா்ன் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி கூட்டணி கட்சி மீண்டும்  வெற்றி பெற்றது. ராணுவத்தின் ஆதரவுடன் போட்டியிட்ட கட்சிகள் தோல்வியை தழுவின. தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி 1ம் தேதி மியான்மரில் ராணுவ புரட்சி ஏற்பட்டது.

தேசிய ஜனநாயக கட்சியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதோடு அரசின் ஆலோசகர் ஆங் சான் சூகி மற்றும் அவரது கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். தொடர்ந்து ஓராண்டு ராணுவ ஆட்சி நடைபெறும் என்றும் பிரகடனப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து  தேர்தல் பிரசாரத்தின்போது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைளை மீறியது, பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் தவறான மற்றும் எரிச்சலூட்டும் தகவல்களை பரப்பியது, முறைகேடு, ஊழல் என சூகி மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் தொடர்பான விசாரணை தனித்தனியாக நடந்து வந்தது.

பொது மக்களை தூண்டி விடுதல் மற்றும்  கொரோனா கட்டுப்பாடுகளை மீறியது தொடர்பான இயற்கை பேரிடர் மேலாண்மை சட்டத்தை மீறிய வழக்கில் நேற்று மியான்மர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இரு வழக்கிலும் தலா இரண்டு ஆண்டுகள் என ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அவர் தொடர்ந்து 4 ஆண்டுகள் வீட்டுக்காவலில் வைக்கப்படுவாரா அல்லது சிறையில் அடைக்கப்படுவாரா என்பதை நீதிமன்றம் இன்னும் தெளிவாக உறுதி செய்யவில்லை.

Related Stories: