திருப்பதி-திருமலை மலைப்பாதையில் நவீன தொழில்நுட்பத்துடன் நிலச்சரிவை சீரமைக்க நடவடிக்கை: கேரள நிபுணர்கள் குழுவினர் ஆய்வு

திருமலை: திருப்பதி-திருமலை மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளை மறுசீரமைக்க நவீன அறிவியல் தொழில்நுட்பம் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள நிபுணர்கள் குழுவினர் தெரிவித்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் மலைப்பாதையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் மண் சரிவு ஏற்பட்டது. மேலும், பாறைகள் சரிந்து விழுந்து போக்குவரத்து தடைப்பட்டது. இதையடுத்து, மண் சரிவு ஏற்பட்ட இடங்களை டெல்லி மற்றும் சென்னை ஐஐடி குழுவினர் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் திருப்பதி 2வது மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் விழுந்து சேதமடைந்த இடத்தை கேரள மாநிலம், கொல்லம் அமிர்தா பல்கலைக்கழகத்தில் உள்ள பேரிடர் நிலச்சரிவு ஆய்வு குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, ஆய்வு குழுவினர் கூறுகையில், ‘பாறைகள் சரிந்து விழுந்த இடத்தில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நிலச்சரிவை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளோம். எதிர்காலத்தில் நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளை மறுசீரமைக்க நவீன அறிவியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தேவஸ்தானத்திற்கு விரிவான ஆய்வு நடத்தி அறிக்கை தர உள்ளோம்’ என்றனர்.

ஆய்வின்போது, நிபுணர்கள் குழு பேராசிரியர்கள் மனிஷா, நிர்மலா வாசுதேவன், சுதேஷ் வித்வான், தேவஸ்தான வன அலுவலர் ஸ்ரீனிவாஸ், செயற் பொறியாளர் சுரேந்திரநாத், வனச்சரகர் வெங்கடசுப்பையா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories: