முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் 3 அடி உயர குள்ள மனிதருக்கு கார் ஓட்ட டிரைவிங் லைசன்ஸ்: இந்தியாவில் முதல்முறை சாதனை

ஐதராபாத்: இந்தியாவில் முதல்முறையாக 3 அடி உயரமே உள்ள ஒருவர், கார் ஓட்டுவதற்கான உரிமம் பெற்றுள்ளார். தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்தவர் கட்டப்பள்ளி சிவபால். 42 வயதான இவர், பட்டப்படிப்பு படித்துள்ளார். இவருடைய சொந்த ஊர் கரீம்நகர் மாவட்டம். இவர் நீண்ட முயற்சிக்குப் பிறகு கார் ஓட்டுவதற்கான உரிமத்தை பெற்றுள்ளார். இவ்வளவு குள்ளமான ஒருவர், இந்தியாவில் கார் ஓட்டுவதற்கான உரிமத்தை பெற்றிருப்பது இதுவே முதல்முறை.

இதற்காக தான் அனுபவித்த வேதனைகள்  பற்றி சிவபால் கூறியதாவது: படிக்கும் போதே எல்லாரும் என்னை கிண்டல் செய்வார்கள். பட்டப்படிப்பு முடித்த பிறகு பல இடங்களில் வேலை தேடி அலைந்தேன். நான் குள்ளமாக இருந்ததால் யாரும் வேலை தரவில்லை. கடைசியாக, எனது நண்பரின் முயற்சியால் தற்போது வேலை செய்யும் கம்பெனியில் வேலை கிடைத்தது. இங்கு 20 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறேன்.

சில நேரங்களில் வீட்டுக்கு செல்வதற்கு கார் முன்பதிவு செய்வேன். ஆனால், அவர்கள் வந்து பார்த்து விட்டு, என்னை ஏற்றாமல் சென்று விடுவார்கள். பலமுறை இப்படி நடந்துள்ளது. அப்போது, கண்ணீர் விடுவேன். எனது மனைவியுடன் வெளியில் செல்லும் போதும் என் உருவத்தை ஏளனம் செய்வார்கள். அதனால், நானே சொந்தமாக கார் வாங்கி ஓட்ட முடிவு செய்தேன். இணையதளத்தில் தேடியபோது, அமெரிக்காவை சேர்ந்த ஒருவரின் உதவி கிடைத்தது. அவர் கொடுத்த ஆலோசனைகளின்படி, எனக்கு ஏற்றவகையில் காரை மாற்றி அமைத்தேன்.

பின்னர், போக்குவரத்து அதிகாரிகளை சந்தித்து ஓட்டுநர் உரிமம் கேட்டேன். உயரத்தை காரணம் காட்டி மறுத்து விட்டனர். பின்னர், உயரதிகாரிகளுக்கு மனுக்கள் போட்டு, 3 மாதங்களுக்கு மட்டும் உரிமம் பெற்று காரை ஓட்டினேன். அதில் திருப்தி அடைந்த பிறகே., அதிகாரிகள் எனக்கு முழு நேர ஓட்டுநர் உரிமத்தை வழங்கினர். இதன்மூலம், லிம்கா சாதனை புத்தகம் உட்பட பல்வேறு சாதனைகளில் இடம் பெற உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: