தவறான சிகிச்சையால் குழந்தை இறந்து பிறந்ததாக புகார்

வேளச்சேரி: அடையாறில் மருத்துவர்களின் தவறான சிகிச்சையால், குழந்தை இறந்து பிறந்ததாக உறவினர்கள் தனியார் மருத்துவமனை மீது போலீசில் புகார் அளித்துள்ளனர். சென்னை ஓட்டேரி, அலெக்சாண்டர் சாலையை சேர்ந்தவர் பிர்தவுஸ் பாத்திமா (25). நிறைமாத கர்ப்பிணியான இவர், கடந்த 3ம் தேதி, அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று அதிகாலை பிரசவ வலியால் அவதிப்பட்ட பிர்தவுஸ் பாத்திமாவுக்கு குழந்தை பிறந்தது. ஆனால், அசைவின்றி கிடந்ததால் குழந்தையை டாக்டர்கள் பரிசோதித்தனர்.

அப்போது, குழந்தை இறந்தது தெரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள், மருத்துவர்களின் தவறான சிகிச்சையால்தான் குழந்தை இறந்தே பிறந்தது என கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், இதுபற்றி சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, தனியார் மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை இறந்து பிறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories:

More