காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரம் ஆபாச படங்களை அனுப்பி இளம்பெண்ணுக்கு மிரட்டல்: தனியார் நிறுவன ஊழியர் கைது

சென்னை: மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், ராம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் நேற்று முன்தினம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: மயிலாப்பூரில் எனது மனைவி மற்றும் 28 வயது மகளுடன் வசித்து வருகிறேன். எனது மகன் பெருங்குடியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். சில நாட்களுக்கு முன், எனது மகள் வேலையில் இருந்து விலகினார். இதுபற்றி மகளிடம் கேட்டபோது, அதே நிறுவனத்தில் வேலை செய்து வரும் பெரும்பாக்கம் முக்கம்பாளையம் சாலையை சேர்ந்த அஸ்வின் விக்னேஷ் (41) என்பவர், தன்னை ஒருதலையாக காதலித்து தொந்தரவு செய்வதாகவும், அவரது காதலை ஏற்காததால் அதிகளவில் நெருக்கடி கொடுத்ததாகவும், இதனால் வேலையில் இருந்து நின்று விட்டேன் எனவும் கூறினாள்.

இந்நிலையில், அஸ்வின் விக்னேஷ் எனது மகளின் மின்னஞ்சல் முகவரியில் ஆபாச படங்களை அனுப்பி மிரட்டியுள்ளார். அதோடு இல்லாமல் எனது மனைவியின் வாட்ஸ்அப் எண்ணிற்கும் ஆபாச படங்களை அனுப்பி தொந்தரவு செய்து வருகிறார். எனவே தவறான நோக்கத்தில் எனது மகள் மற்றும் மனைவிக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பி தொந்தரவு செய்து வரும் அஸ்வின் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார். இதுபற்றி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், ராமின் மகளை காதலிக்க வலியுறுத்தி அஸ்வின் விக்னேஷ் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததும், ஆபாச படங்களை அனுப்பி மிரட்டியதும் தெரியவந்தது. அதைதொடர்ந்து அஸ்வின் விக்னேஷை நேற்று கைது செய்து, அவரிடம் இருந்து 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: