போதிய பணியாளர்கள் இல்லாததால் நீதிமன்றங்களில் வழக்குகள் தேக்கம்: ஐகோர்ட் தலைமை நீதிபதி பேச்சு

மதுரை: ஐகோர்ட் மதுரை கிளை வளாகத்தில் கணினி மையம், நீதிமன்ற அலுவலர் உறைவிடம் திறப்பு விழா மற்றும் சட்ட நாள் கொண்டாட்டம் ஆகியவை நடைபெற்றன. இதில் கலந்து கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசுகையில், ‘நீதித்துறையின்  கட்டமைப்புகளும், நிதி ஒதுக்கீடும் குறைவாக உள்ளன. இதை அரசு சரி செய்யும் என நம்புகிறோம். தற்போது நவீன தொழில்நுட்பங்கள் வளர்ச்சி அதிகரித்துள்ளன. அதனுடன் நாமும் பயணிக்க வேண்டும். மதுரை ஐகோர்ட் கிளை சிறப்பாக செயல்படுகிறது’ என்றார். கணினி மையத்தை திறந்து வைத்து உச்சநீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் பேசுகையில், ‘கடந்த 2005ல் மத்திய அரசு நீதித்துறையில் தகவல் தொழில்நுட்பத்தை கொண்டு வந்தது. 2013ல் நீமன்றத்தில் இணைய வழி நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் 2015லும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தற்போதும் செயல்படுத்தப்பட்டுள்ளன.

1949 நவ.26ல் சட்ட நாளாக அறிவிக்கப்பட்டு தற்போது வரை 72 ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதில், 150 சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன’ என்றார். சென்னை ஐகோர்ட்  தலைமை நீதிபதி (பொறுப்பு) முனீஸ்வர் நாத்  பண்டாரி பேசும்போது, ‘சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுரை 1 கோடி ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. 3 ஆண்டுகளில் 24 கோடி ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பதே இலக்கு. இதற்காகவே மதுரைக் கிளையில் கணினி மையம் திறக்கப்பட்டுள்ளது. நீதிமன்றங்களில் அதிக வழக்குகள் நிலுவையில் உள்ளதற்கு நீதிமன்றங்கள் காரணமல்ல. நீதிமன்றங்களில் பணியாளர்கள் போதிய அளவில் இல்லாததால் வழக்குகள் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தேவையான ஊழியர்கள், நீதிபதிகள் நியமிக்கப்படும் போது வழக்குகள் தேங்குவது குறையும்’’ என்றார்.

Related Stories: