மாற்றுத்திறனாளிகளின் தேர்தல் விழிப்புணர்வு வாகன பேரணி: கலெக்டர் தொடக்கி வைத்தார்

நாகர்கோவில்: குமரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் குறித்த விழிப்புணர்வு வாகன பேரணியினை கலெக்டர் அரவிந்த் தொடக்கி வைத்தார். இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிக்காட்டுதலின்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம்-2022 தொடர்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் தொகுதி வாரியான வரைவு வாக்காளர் பட்டியல் 01.11.2021 அன்று அங்கீகரிக்கப்பட அரசியல் கட்சிகள் முன்னிலையில் மாவட்ட கலெக்டரால் வெளியிடப்பட்டது. 01.01.2022-ஐ தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியானவர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், பெயர் நீக்கம் மற்றும் முகவரி மாற்றம் தொடர்பான பணி நடைபெற்று வருகிறது.

இதன் தொடர்ச்சியாக தேசிய மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணியை கலெக்டர் அரவிந்த் தொடக்கி வைத்தார். மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற இந்த மூன்று சக்கர வாகன பேரணி, கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி நகரத்தின் முக்கிய பகுதிகள் வழியாக டதி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நிறைவுபெற்றது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மா.வீராசாமி, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் சேகர், தேர்தல் தாசில்தார் சுசீலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More