மதுரையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்லத் தடை: மாவட்ட ஆட்சியர்

மதுரை: மதுரை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு சில லட்சம் பேரின் உயிரை பறித்தது. தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்தாலும் கொரோனாவின் உருமாற்ற வைரஸ் பற்றிய அச்சம் மட்டும் ஓயவில்லை. ஒவ்வொரு வகையாக உருமாற்றமடைந்து உலக நாடுகள் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது. ஆல்பா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ் என்ற வரிசையில் தற்போது ஒமிக்ரான் தொற்று பரவி உள்ளது. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வீரியமிக்க ‘ஒமிக்ரான்’ கொரோனா வைரஸ் 29க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது.

இதனால், உலக முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த கொரோனா வைரஸ் இந்தியாவுக்குள் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன்படி ஒமிக்ரான் பரவி உள்ள நாடுகளில் இருந்து இந்தியா வந்தவர்களின் பட்டியலை எடுத்தனர். அதன்படி, தென் ஆப்பிரிக்காவில் இருந்த கடந்த மாதம் கர்நாடகாவுக்கு வந்த 95 பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் 2 பேருக்கு ஒமிக்ரான் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதன்மூலம், இந்தியாவிலும் இந்த வைரஸ் நுழைந்து விட்டது. இது, மற்ற கொரேனா வைரஸ்களை விட 5 மடங்கு வேகமாக பரவும் என்பதால், ஒன்றிய, மாநில அரசுகள், இதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளன.

தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று வெளிநாட்டு பயணிகள் மூலம் பரவுவதை தடுக்கும் விதமாக விமான நிலையங்களில் பயணிகளுக்கு தீவிர பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; அதில், “ரேஷன் கடை, வியாபார நிறுவனங்கள், திரையரங்கு, சூப்பர் மார்க்கெட், கடை வீதிகள், துணிக்கடைகள், வங்கிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள்கள் 18 பொது இடங்களுக்குச் செல்ல தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் முதல் தவணை 71 சதவீதம் பேரும் 2ம் தவணை 32 சதவீதம் பேர் மட்டுமே செலுத்திக் கொண்டுள்ளனர்.

தென் ஆப்ரிக்காவில் இருந்து பரவிய ஒமிக்ரான் வைரஸால் கர்நாடகாவுக்கு வந்த இருவர் பாதிக்கப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் மதுரை உட்பட 12 அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஒமைக்கரன் வைரஸ் கண்டறியும் கெமிக்கல் கிட் வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. மதுரையில் விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு பரிசோதனை செய்வதற்கு ஏதுவாக மதுரை அரசு மருத்துவமனையில் ஒமிக்ரான் வைரஸ் கண்டறியும் பரிசோதனை வசதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories: