இராயம்புரம் குடிநீர் ஏரியில் மீன்கள் செத்து மிதந்தது-தண்ணீர் தன்மையை ஆய்வு செய்ய கோரிக்கை

செந்துறை : செந்துறை அருகே இராயம்புரம் கிராமத்தில் பொதுமக்கள் குடிநீருக்கு பயன்படும் ஏரியில் மர்மமான முறையில் மீனகள் செத்து மிதந்தது. இதனை உடனே இளைஞர்கள் அப்புறப்படுத்தினர். ஏரி நீரின் தன்மையை ஆய்வு செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.அரியலூர் மாவட்டம் செந்துறை அருகிலுள்ள இராயம்புரம் கிராமத்தில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதி மக்களின் குடிநீர் பயன்பாட்டிற்கு ஆலங்குளம் எனும் ஏரி உள்ளது. இந்த ஏரியில் உள்ள நீரை குடிநீர் மற்றும் சமையலுக்கு மட்டும் அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது வடகிழக்கு பருவ மழையால் ஏரிநிரம்பி உள்ள நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் மர்மமான முறையில் மீன்கள் செத்து மிதக்க தொடங்கி வருகின்றன.

குடிநீர் குளத்தில் இறந்த மீன் அழுகினால் நீரை பயன்படுத்த முடியாமல் போகும் நிலை ஏற்படும் என்பதால் இறந்த மீன்களை அப்பகுதி இளைஞர்கள் ஏரியில் இருந்து அப்புறப்படுத்தி வருகின்றனர்.இன்னும் சில மீன்கள் உயிருக்கு போராடி சோர்வாக நீந்தி வருகின்றன. இந்த ஏரியில் மீன் பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளதால் மர்ம நபர்கள் விஷம் வைத்திருக்கலாம் என அப்பகுதி இளைஞர்கள் அஞ்சுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் குடிநீரின் தன்மையை பரிசோதித்து அதில் ஏதேனும் விஷம் கலந்து இருக்கிறதா என ஆய்வு செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர்.

Related Stories: