ஊத்துக்கோட்டையில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட ஒப்பந்த ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்

ஊத்துக்கோட்டை: தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு அலகு உள்ளிட்ட இடங்களில் ஆலோசகர், ஆய்வக நுட்புனர், செவிலியர், மருந்தாளுநர், கணினி மேலாளர், சமுதாய நல ஒருங்கிணைப்பாளர், மாவட்ட திட்ட மேலாளர், மேற்பார்வையாளர், ஆய்வக மேற்பார்வையாளர், கணக்காளர், ஒட்டுனர் மற்றும் உதவியாளர்கள் என பல்வேறு பணிநிலைகளில் ஒப்பந்த அடிப்படையில் 2,500 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் 25,000 பேர் பணிபுரிந்து வருகிறார்கள். தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய மாற்றத்தை அறிவிக்கவேண்டும். ஆனால், கடந்த 9 ஆண்டுகளாக ஊதிய தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் ஊதிய மாற்றத்தை அறிவிக்கவில்லை. அதே நேரத்தில் கடந்த 9.1.2020 அன்று தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு மட்டும் ஊதிய மாற்றத்தை அறிவித்துள்ளாதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் பணிபுரியும் அனைத்து  ஊழியர்களுக்கும் ஊதிய மாற்றத்தை அமல்படுத்திட ஒன்றிய அரசை வலியுறுத்தி  பணிபுரியும் இடங்களில் கவன ஈர்ப்பு கோரிக்கை அட்டை மற்றும் கருப்பு பேட்ச்  அணிந்து பணிபுரியும் போராட்டம் நடைபெற்றது. ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனையில் ஒன்றிய அரசை கண்டித்து ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கூறுகையில், ‘எங்கள் கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் வரும் 19ம் தேதி சென்னையில் மாபெரும் உண்ணாவிரதம் போராட்டம் நடத்துவோம்’ என்றனர். 

Related Stories:

More