வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு வழக்கை விரைவாக விசாரிக்கும் தமிழக அரசின் கோரிக்கை ஏற்பு

புதுடெல்லி: கல்வி, வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி கடந்த பிப்ரவரி 26ம் தேதி தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, சட்டத்தை ரத்து செய்தது. இதை தமிழக அரசு உட்பட 11க்கும் மேற்பட்டோர் மேல்முறையீடு மனுவும்,, 13 கேவியட் மனுக்களும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர்கள் வில்சன், குமணன் ஆகியோர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் நேற்று புதிய கோரிக்கை வைத்தனர்.

அதில், ‘வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன. இதில், தமிழக அரசு தாக்கல் செய்த மனு, விசாரணைக்கும் தயார் நிலையில் இருக்கிறது. இந்த வழக்கு நிலுவையில் இருப்பதால், தமிழகத்தில் மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு, சேர்க்கை நடைபெறாமல் தாமதமாகி வருகிறது. அதனால், இந்த வழக்குகளை விரைவாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,’ என கோரினர். இதை ஏற்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, இந்த வழக்கை அடுத்த வாரம் பட்டியலிட்டு விசாரிப்பதாக தெரிவித்தார்.

Related Stories:

More