சபரிமலையில் விரைவில் ஏற்பாடு; சன்னிதானத்தில் உள்ள அறைகளில் 12 மணிநேரம் பக்தர்கள் தங்கும் வசதி: தேவசம் போர்டு தலைவர் தகவல்

திருவனந்தபுரம்: சபரிமலையில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் சன்னிதானத்தில் உள்ள அறைகளில் 12 மணி நேரம் தங்குவதற்கு விரைவில் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் அனந்தகோபன் கூறினார். சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது கொரோனா வழிகாட்டு நெறிமுறைப்படி பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி தினமும் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் 50 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆன் லைனில் முன்பதிவு செய்ய முடியாத பக்தர்களுக்கு நிலக்கல் உள்பட கேரளாவில் 10 பகுதிகளில் உடனடி முன்பதிவு வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு வரை சபரிமலை சன்னிதானத்தில் பக்தர்கள் தங்க அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

இதற்காக திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் 500க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் முதல் சன்னிதானத்தில் உள்ள அறைகளில் பக்தர்கள் தங்க அனுமதிக்கப்படுவதில்லை. தரிசனம் முடிந்தவுடன் பக்தர்கள் திரும்பி சென்று விட வேண்டும். இதன் காரணமாக தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்பட வெகு தொலைவான இடங்களில் இருந்து வரும் பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்து காணப்படுகிறது. இதேபோல் நெய்யபிஷேகம், பம்பா ஸ்தானம் ஆகியவையும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதுவும் பக்தர்கள் வருகை குறைவுக்கு ஒரு காரணமாகி விட்டது. இதனால் மீண்டும் அந்த வசதிகளை தொடங்க தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் அனந்தகோபன் நிருபர்களிடம் கூறியதாவது: சபரிமலை தரிசனத்திற்கு வருவதற்கு பக்தர்கள் அச்சப்பட தேவையில்லை. ஆன் லைனில் முன்பதிவு செய்து வரவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. நிலக்கல் உள்பட 10 இடங்களில் உடனடி முன்பதிவு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆன் லைனில் முன்பதிவு செய்யாமலேயே இங்கு வந்து நேரடியாக முன்பதிவு செய்து தரிசனம் செய்யலாம். சபரிமலையில் பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. ஆகவே நெய்யபிஷேகத்தை பக்தர்கள் நேரடியாக நடத்துவது, பம்பா ஸ்தானம், சன்னிதானத்தில் பக்தர்கள் 12 மணி நேரம் தங்குவது உள்பட வசதிகள் மீண்டும் தொடங்கப்படும். இதுதொடர்பாக அரசு விரைவில் அனுமதி அளிக்கும் என்று நம்புகிறேன். ஆன் லைன் முன்பதிவை ரத்து செய்ய ேவண்டும் என்று அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

More