தெலுங்கில் 3,000 பாடல்கள் எழுதிய சீதாராம சாஸ்திரி காலமானார்: பிரதமர் மோடி இரங்கல்

ஐதராபாத்: தெலங்கானா மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த தெலுங்கு திரைப்பட பாடலாசிரியர் சீதாராம சாஸ்திரி (66), நுரையீரல் புற்றுநோய் காரணமாக ஐதராபாத் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலமானார். அவரது மறைவுக்கு ஆந்திரா, தெலங்கானா மாநில அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். கே.விஸ்வநாத் இயக்கிய ஜனனி ஜன்மபூமி படத்தில் அறிமுகமான சீதாராம சாஸ்திரியை, சிரிவென்னேலா சீதாராம சாஸ்திரி என்று திரைத்துறையில் அழைப்பார்கள்.

ஆந்திர மாநில நந்தி விருதுகளையும், 2019ல் ஒன்றிய அரசால் வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ள அவர், 1984ல் இருந்து 37 ஆண்டுகளில் 3,000க்கும் மேற்பட்ட பாடல்கள் எழுதியுள்ளார். கடைசியாக ராஜமவுலி இயக்கும் ஆர்ஆர்ஆர் என்ற படத்துக்கு பாடல் எழுதியிருந்தார். ஜனாதிபதியிடம் இருந்து சீதாராம சாஸ்திரி பத்மஸ்ரீ விருது பெறும் போட்டோவை பதிவு செய்து, சீதாராம சாஸ்திரியின் மறைவுக்கு பிரதமர் மோடி தெலுங்கில் இரங்கல் தெரிவித்துள்ளார். ‘தெலுங்கு மொழியின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டவர் சிரிவென்னேலா சீதாராம சாஸ்திரி’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: